திருக்கோவிலூரை தேமுதிக-வும் விருப்பப் பட்டியலில் வைத்துள்ள நிலையில், தொகுதி யாருக்கு என்று இன்னும் முடிவாகாத நிலையிலேயே கிட்டத்தட்ட கவுதமசிகாமணிதான் அங்கே வேட்பாளர் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. திமுக-வினரைக் கேட்டால், “இம்முறையும் திருக்கோவிலூர் தொகுதி திமுக-வுக்குத்தான். ஆனால், அமைச்சருக்குப் (பொன்முடி) பதிலாக அவரது பையன் போட்டியிடுவார் போலிருக்கிறது” என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.
இது தொடர்பாக திருக்கோவிலூர் ஒன்றிய திமுக செயலாளர் முருகனிடம் கேட்டதற்கு, “கிடைக்கும் சுவர்களில், எங்கள் தலைவரின் படம், சின்னம், கூட்டணிக் கட்சிகளின் கொடி, தலைவர்களின் படத்தை மட்டுமே வரையச் சொல்லியிருந்தோம். சிலர் ஆர்வக் கோளாறில் இப்படி எழுதியுள்ளனர். கவுதம சிகாமணி வேட்பாளராக இருக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். ஆனால், தலைமை அறிவிக்காமல் நாங்களாக எதையும் செய்ய மாட்டோம்” என்றார். இதே தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஒன்றிய திமுக செயலாளர் ரவிசந்திரனிடம் கேட்டதற்கு, “கிராமப்புறங்களில் சிலர் தவறாக எழுதிவிட்டனர். உடனே அதை அழிக்கச் சொல்லி விட்டோம்” என்றார்.
