துாத்துக்குடி: வைகுண்டபதி பெருமாள் கோவில் திருப்பணியில் முறைகேடு நடந்துள்ளதாக, அமைச்சரின் உதவியாளரான அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
துாத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வைகுண்டபதி பெருமாள் கோவிலில், ஆறு ஆண்டுகளாக திருப்பணி நடந்து வருகிறது. அதில், முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் நிர்வாகி வெற்றிவேல், 56, மத்திய பாகம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணி என்ற பெயரில், ஸ்ரீ வைகுண்டபதிகைங்கரிய டிரஸ்ட் மூலமாக, கோவில் நிர்வாகம், மக்களிடமும், பக்தர்களிடமும் கல் மண்டபம் அமைக்கும் பணிக்காக, பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் ஸ்தபதி என்பவரிடம், 3 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, 3 கோடியே 5 லட்சம் ரூபாய் பணம் வழங்கி உள்ளனர். ஆனால், வழங்கப்பட்ட தொகைக்கான துாண்கள் இதுவரை வரவில்லை. ஒப்பந்தப்படி வேலையையும் செய்து முடிக்கவில்லை.
இதற்கிடையே, நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், திருப்பணிகளை செய்ய முடியவில்லை என, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உபயதாரர்கள் விலகி சென்றதாக, அறநிலையத் துறை இணை கமிஷனர் அன்புமணி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆனால், தற்போது வரை பக்தர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அறங்காவலர் குழு தலைவராக உள்ள அமைச்சர் கீதா ஜீவனின் உதவியாளர்களில் ஒருவரான செந்தில்குமார், டிரஸ்ட் பொருளாளர் இளங்குமரன், கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வி, அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி மற்றும் அலுவலக ஊழியர்கள் சிலர், இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், தற்போது மனு ரசீது வழங்கி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
