'ஏசி' அறையாக மாறிய அரசு பஸ்கள் தங்குவதற்கு பயணிகள் ஆர்வம்

மூணாறு: மூணாறில் ‘ஏசி’ வசதியுடன் அறைகளாக மாறிய அரசு பஸ்களில் குறைந்த பட்ஜெட்டில் தங்கி செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கேரளாவில் நிதி நெருக்கடியில் சிக்கிய கேரள அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு திட்டங்கள் மூலம் அதில் இருந்து மீண்டு வருகிறது. குறிப்பாக ‘ பேக்கேஜ்’ அடிப்படையில் சுற்றுலா பகுதிகளுக்கு பஸ் இயக்கம், டிப்போக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெட்ரோல் பங்க், ‘டபுள் டெக்கர்’ பஸ், பயன்பாடற்ற பஸ்களில் தங்கும் அறைகள் போன்ற திட்டங்கள் மூலம் வருவாய் அதிகரித்தது.

அவற்றில் மூணாறில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ள ‘டபுள் டெக்கர்’ பஸ் சேவை, தங்கும் அறைகள் ஆகியவை சுற்றுலா பயணிகள் இடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

பழைய மூணாறில் உள்ள பஸ் டெப்போவில் பயன்பாடற்ற பத்து பஸ்கள் ‘ஏசி’ வசதியுடன் தங்கும் அறைகளாக மாற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 8 பஸ்களில் தலா 16 பேர் வீதம், ஒரு பஸ்சில் 14 பேர் தங்கலாம். அவற்றில் ஒரு இரவு (மாலை 5:00 மணி முதல் மறுநாள் காலை 9:30 வரை) தங்குவதற்கு நபர் ஒன்றுக்கு கட்டணம் ரூ.220 வசூலிக்கின்றனர்.

மேலும் ஒரு பஸ் இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு அறைக்கு கட்டணம் ரூ.1000 வசூலிக்கப்படுகிறது.

இதில் சிறுவர் உட்பட நால்வர் வரை தங்கலாம். குறைந்த பட்ஜெட்டில் பஸ் அறைகளில் தங்கி செல்ல சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link