நமது நிருபர்
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகள் தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இண்டி கூட்டணியில் காங்.,-தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்ததால் குழப்பம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையும் ஜவ்வாக இழுத்தது. பல கட்ட பேச்சுக்கு பின் தொகுதி பங்கீடு முடிவு எட்டப்பட்டது. அதில், வி.சி.க.,வுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்க்பட்டது. இதில் அந்த கட்சியினருக்கு திருப்தி இல்லை. தற்போது 3 தொகுதிகளில் தங்கள் கட்சி தனித்துப்போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளைக் கோரியிருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்க முன் வரவில்லை. திமுக தரப்பிலிருந்து ஒரு தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க முன்வந்துள்ளது.
இருந்த போதிலும் வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகும் கூட அது எந்தத் தொகுதி என்பது இன்னும் உறுதியாகவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ வேட்பு மனு தாக்கல் செய்துள்ள தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. விசிக’வுக்கு இதுவரை எந்தத் தொகுதி என்பதே தெரியாத நிலையில் எமது கட்சி நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, விசிக சார்பில் தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
