அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில், நம் நாட்டின் பால் வளம் மற்றும் விவசாய துறைகளில், இந்திய நலன்கள் முழுதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து, பார்லி.,யில் அவர் நேற்று கூறியதாவது:
ஒருவரையொருவர் சார்ந்தும், ஒருவருக்கொருவர் பயன் தரக்கூடிய வகையிலும் பொருளாதாரத்தை கொண்ட இருபெரும் நாடுகள், இந்தியா, அமெரிக்கா. வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, அங்கிருந்து பெற்றுக்கொள்வதோடு, நம் ஏற்றுமதிகளையும் விரிவுபடுத்த போகிறோம்.
மொத்தத்தில், வளர்ந்த இந்தியா மற்றும் தன்னிறைவு இந்தியா என்ற இலக்குகளை எட்டுவதற்கு, இந்த ஒப்பந்தம் ஊக்கத்தை தரும். அமெரிக்காவின் பார்வையில், சில குறிப்பிட்ட துறைகள், மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டன.
இருப்பினும், விவசாயம் மற்றும் பால் வளம் ஆகிய துறைகளில், இந்திய நலன்கள், முழுதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஓராண்டு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பல்வேறு துறைகள் குறித்தும், முக்கிய முடிவுகளை இறுதிசெய்யும் வகையில், இந்த ஒப்பந்தம் அமைந்தது. இந்தியாவின் வர்த்தக போட்டி நாடுகளை விட, குறைவான வரி இந்தியாவுக்கு விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த குறைவான வரி விதிப்பு வாயிலாக அமெரிக்க சந்தைகளில், இந்திய ஏற்றுமதி பொருள்களின் போட்டித்திறன் அதிகரிக்கும்.
குறிப்பாக, உழைப்பு மிகுந்த தொழில் துறை மற்றும் உற்பத்தி துறை ஆகியவற்றில், ஒப்பீட்டு அளவிலான அதிக பயன்கள் கிடைப்பதற்கு, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
இந்தியாவின் நலன்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை, தீவிரமாக கருத்தில் கொண்டுதான் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையே உருவாகும் வர்த்தக நட்புறவு வாயிலாக, நம்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், திறன்மிகு தொழிலாளர்கள், தொழில்துறை ஆகியவற்றில் புதிய வாய்ப்புகள் உருவாகும். அதோடு, இந்த துறைகளுக்கு எல்லாம், அதிநவீன தொழில்நுட்பங்களும் வந்து சேரும்.
இந்த ஒப்பந்தம், இந்திய மக்களின் பரவலான நலன்கள் சார்ந்தும், நாட்டிற்கு பயன் அளிக்கும் விதத்திலும் இருந்து, சர்வதேச வளர்ச்சி மற்றும் புதுமைகளை, வரும் ஆண்டுகளில் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
– -நமது டில்லி நிருபர்- –
