“முதல்வருக்கு நிர்வாகம் செய்ய தெரியல” – அதிமுக அலுவலகத்தில் அன்புமணி ஆக்ரோஷம்!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (23.03.2026) நடைபெற்றது. அதன்படி, அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்தனர். அதில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நின்று பா.ம.க தலைவர் அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய அரசும், மாநில அரசும் ஒரே கூட்டணி அமைத்தால் மாநிலத்துக்கு நல்லது. கடந்த ஐந்த ஆண்டு காலம் திமுக, மத்திய அரசை எதிர்க்கின்ற ஒரு மனநிலை. எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வது, மத்திய அரசை எதிர்ப்பது. இதனால், தமிழ்நாட்டுக்கு ஒன்னும் கிடைக்காது. வேண்டுமென்றே எதிர்க்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி அரசு இருந்தால் நிச்சயமாக எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்? எவ்வளவு கட்டுமானங்கள் கிடைக்கும்? எவ்வளவு நிதி உதவி கிடைக்கும்? என்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். அதனால் இனிமேல் டெல்லியில் கூட்டணியில் அமைக்கிறார்கள், பா.ஜ.க கண்ட்ரோல் செய்கிறது என்பதெல்லாம் பயந்த திமுகவுடைய பேச்சு, பயந்த முதலமைச்சருடைய பேச்சு. உங்களுக்கு நிர்வாகம் நடத்த தெரியவில்லை. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டில் தினம் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

பெண்களை, குழந்தைகளை மானபங்கம் செய்து பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். அதை தடுப்பதற்கு உங்களுக்கு துப்பு கிடையாது. எல்லா துறையிலும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. கள்ளச் சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதை தடுப்பதற்கு துப்பு இல்லை. எதற்கு எடுத்தாலும் பா.ஜ.க, டெல்லி என்று சொல்லிவிட்டால் என்ன நடக்கும்? மாநில சுயாட்சி என்று சொல்கிறார்கள், ஆனால் ஏன் கடந்த இரண்டு வருடமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. உள்ளாட்சிக்கு ஏன் சுயாட்சி கொடுக்கவில்லை. சுயாட்சி பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? எனவே மக்களை திசை திருப்புகின்ற பயந்து போன ஒரு முதல்வருடைய பேச்சு, பயந்து போன திமுக கூட்டணி பேசுகிற பேச்சு. உங்களுடைய சாதனைகளை சொல்லி நீங்கள் வாக்கு கேட்கலாமே?  எதற்கு உங்களுக்கு 28 கட்சி கூட்டணி? உங்களுக்கு ஏன் இவ்வளவு பயம்? ஏன் இவ்வளவு கட்சி சேர வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இருக்கிறது. அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது” என்று ஆக்ரோஷமாகப் பேசினார். 

Source link