தர்பூசணியுடன் வெடி பொருட்கள் கடத்தல் 18,000 ஜெலட்டின், 4,800 டெட்டனேட்டர் பறிமுதல்

பாலக்காடு: தமிழகத்தில் இருந்து, கேரளாவுக்கு தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வேனில் பதுக்கி கடத்தப்பட்ட, 18,000 ஜெலட்டின் குச்சிகள், 4,800 டெட்டனேட்டர்களை பாலக்காடு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு டவுன் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விபின்குமார் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு கோவை- – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தினர். டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக இயக்கினார். அந்த வாகனத்தை போலீசார் விரட்டி மடக்கினர்.

பிடிபட்ட வாகனத்தை சோதனையிட்ட போது, தர்பூசணி பழங்களுக்கு அடியில் தார்ப்பாலின் கொண்டு மறைக்கப்பட்ட நிலையில், 90 பெட்டிகள் இருந்தன.

ஒவ்வொரு பெட்டியிலும் தலா, 200 வீதம், மொத்தம் 18,000 ஜெலட்டின் குச்சிகளும், மற்றொரு பகுதியில், 4,800 டெட்டனேட்டர்களும் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பாலக்காடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புடன் அனைத்து பெட்டிகளும் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. பின், பாதுகாப்பான இடத்திற்கு அவை மாற்றப்பட்டன.

இது தொடர்பாக, தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் செந்தில்குமார், 48, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வெடிபொருட்கள் எங்கு கொண்டு செல்லப் படுகின்றன என்பது தெரியாது என்றும், பாலக்காட்டில் ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டால், வேறொரு நபர் வாகனத்தை எடுத்துச் செல்வார் என்றும், டிரைவர் வாக்குமூலம் அளித்துஉள்ளார்.

போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link