கரியர், குடும்பம், உறவுகள் – வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல கேள்விகளும் சிக்கல்களும் நம்மைச் சுற்றி வரும்.
சில நேரங்களில் அந்தப் பிரச்னைகளை யாரிடமும் பகிர முடியாமல் மனதுக்குள் வைத்துக்கொண்டு வாழ்கிறோம். அப்படிப்பட்ட வாசகர்கள் அனுப்பும் வாழ்க்கைச் சிக்கல்களை இந்தத் தொடரில் பதிவு செய்து, அவற்றுக்கு நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை உங்களிடம் கொண்டு வருகிறோம்.
திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் அன்பும், காதலும் இயல்பாகவே அதிகமாக இருக்கும். ஆனால் காலப்போக்கில், வாழ்க்கையின் சுமைகள், வேலைப்பளு, பொறுப்புகள் ஆகியவை அதிகரிக்கும்போது, அந்த அன்பு மெதுவாகக் குறைவது பல தம்பதிகளும் எதிர்கொள்ளும் சிக்கல்.
பேசிக்கொண்டிருந்தவர்கள் மௌனமாக மாறுவது, சின்ன விஷயங்கள் கூட பெரிதாகத் தோன்றி சண்டை போடுவது இவை எல்லாம் அந்த மாற்றத்தின் அறிகுறிகள். இப்படியான ஒரு உறவுச் சிக்கலைப் பகிர்ந்து, ஆலோசனை கேட்டிருக்கிறார் விகடன் வாசகி ஒருவர்.
“எங்களுக்குத் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. என் கணவர் அன்பாக இருந்தார். எனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்துச் செய்வார். சர்ப்ரைஸ்கள் செய்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
‘நான் உடல்நிலை சரியில்லை’ என்று சொன்னால், வீட்டு வேலைகளை என்னுடன் பங்கிட்டுக் கொள்வார். நான் அணியும் ஆடை, ஹேர் ஸ்டைல் என எல்லாவற்றிலும் என் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். சினிமா, வெளியூர், சுற்றுலா என என் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் கடந்த சில வருடங்களாக அவரிடம் சில மாற்றங்களை உணர்கிறேன். எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். சின்ன விஷயங்களுக்குக்கூட எரிச்சல் அடைகிறார். காலை டீ கொஞ்சம் லேட் ஆயிடுச்சு என்றாலோ, வீட்டில் ஏதாவது பொருள் கிடைக்கவில்லை என்றாலோ, குழந்தை விளையாடினாலோ கூட எரிச்சல் அடைந்து எங்களைத் திட்டுகிறார்.
சில நேரங்களில் அவர் பேசும் வார்த்தைகள் மிகவும் கஷ்டமாக இருக்கும். குழந்தைகள் முன்னால் நான் உடைந்து போகக் கூடாது என்பதற்காக, எல்லா வலியையும் உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு இருக்கிறேன்.
ஆரம்பத்தில், ‘அவருக்கு வேலை ப்ரஷர் இருக்கும்’ என்று நினைத்து அதை நான் பெரிசாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது அது தினசரி பிரச்னையாக மாறிவிட்டது. அவர் எப்போது கோபப்படுவார் என்று தெரியாமல் நான் எப்போதும் பயத்தோடு இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.
இதனால் எங்களுக்குள் அமைதியாகப் பேசும் நேரமே இல்லாமல் போய்விட்டது. நான் ஏதாவது சொல்ல முயற்சித்தால் கூட, அது சண்டையாக மாறிவிடுகிறது. சில நேரங்களில் நான் பேசாமல் இருக்கவே முயற்சிக்கிறேன்.
இப்போது எனக்கு ஒரு பெரிய குழப்பம். இது சாதாரணமான கோபமா? இல்லையெனில் இது ஒரு பெரிய பிரச்னையா? இந்த நிலைமையில் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என் கணவரிடம் இதை எப்படிப் பேசிப் புரிய வைப்பது? எங்கள் உறவை எப்படி சீர்செய்வது?
இந்த உளவியல் சிக்கல் குறித்து உளவியல் ஆலோசகர் ப்ரீனுவிடம் பேசினோம்.

“இந்த வாசகி பகிர்ந்திருக்கும் பிரச்னை பல குடும்பங்களில் காணப்படும் ஒன்று. ஒரு உறவில் ‘Emotional Safety’ என்பது மிகவும் முக்கியம். அதாவது, நம்முடைய பேச்சுகள், செயல்பாடுகள், தவறுகள் என எல்லாவற்றையும் ஒருவர் பயமுறுத்தாமல், ஜட்ஜ்மென்ட் செய்யாமல் கேட்பார் என்ற நம்பிக்கை.
ஆனால் அடிக்கடி கோபம் வெளிப்படும் சூழலில், இந்தப் பாதுகாப்பு உணர்வு குறைய ஆரம்பிக்கும். அதனால்தான் இந்த வாசகி ‘பயம்’ அனுபவிக்கிறார்.
சின்ன விஷயங்களுக்குக்கூட கோபம் வரும் இந்த மாதிரியான நடத்தைக்கு வேலைப்பளு, மனஅழுத்தம், எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது போன்ற பல காரணங்கள் இருக்கலாம். முதலில், இது ‘சாதாரண கோபம்’ என்று நினைத்து புறக்கணிக்கக் கூடாது. அடிக்கடி கட்டுப்பாடின்றி வெளிப்படும் கோபம் உறவுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு முக்கிய சிக்னல்.
இது குடும்பத்தில் உள்ளவர்களின் மனநிலையை நிச்சயம் பாதிக்கும். இது ‘Anger Displacement’ ஆகவும் இருக்கலாம். அதாவது, வெளியில் ஏற்பட்ட கோபம் அல்லது மனஅழுத்தத்தை நேரடியாக அங்கே வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில், வீட்டில் உள்ளவர்கள்மீது வெளிப்படுத்துவது.
இந்த ஆண் தான் வேலை செய்யும் இடத்தில் தனக்கு இருக்கும் மனஅழுத்ததத்தை அங்கு காட்ட முடியாமல் வீட்டில் இருப்பவர்களிடம் காட்டுகிறார். வீட்டில் இருப்பவர்கள் பதில் பேசாமல் அமைதியாக இருப்பதால் அவர் அதை தன்னுடைய பழக்கங்களில் ஒன்றாகக் கடைபிடிக்கிறார்.

தீர்வு:
இந்த மாதிரியான கோபம் ஒரு சுழற்சி போல வேலை செய்யும். சில நாள்கள் அமைதியாக இருக்கும், பின்னர் மீண்டும் சின்ன விஷயத்தில் கோபம் வெடிக்கும். இந்தச் சுழற்சி உடைக்கப்படாத வரை பிரச்னை தொடரும்.
இந்த நிலையைச் சமாளிக்க, சண்டை வரும் நேரத்தில் நாமும் கத்துவது, அழுவது போன்ற எதிர்வினைகளைத் தவிர்க்க வேண்டும். அது அந்த நேரத்தில் நிலையை மேலும் மோசமாக்கும். அதற்குப் பதிலாக, சூழல் அமைதியாக இருக்கும் நேரத்தில் கணவரிடம் பேச முயற்சிக்க வேண்டும்.
‘நீ எப்போதும் கோபப்படுற’ என்று குற்றம் சாட்டாமல், ‘நீ கோபப்படும்போது எனக்கு பயமாக இருக்கிறது’ என்று தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
உங்களை நீங்கள் குறை சொல்லி மன்னிப்புக் கேட்காதீர்கள். தவறை உங்கள் பக்கம் எடுத்துக் கொள்ளதீர்கள். சண்டை வரும் சூழலில் ரியாக்ட் செய்யாமல், டிரிகர் ஆகாமல் அந்த இடத்தைவிட்டு கடந்து செல்லுங்கள். நீங்கள் ஒரு சில முறை இது போன்று செய்யும் போது எதிரில் இருப்பவர்கள் அவர்களின் தவறை உணர ஆரம்பிப்பார்கள்.
அடுத்ததாக, கோபம் வரும் சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டும். எந்த நேரங்களில் அவர் அதிகமாக எரிச்சலடைகிறார், எந்த வார்த்தை அவரைக் கோபப்பட வைக்கிறது என்பதை புரிந்துகொள்வது தீர்விற்கு உதவும்.
தம்பதியருக்குள் ‘communication time’ மிகவும் அவசியம். வாரத்திற்கு ஒரு முறை அமைதியாக அமர்ந்து பேசும் பழக்கத்தை உருவாக்கலாம். இதில் குற்றச்சாட்டு இல்லாமல், இருவரின் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அன்பு இருந்தாலும், ஒரு உறவில் சில எல்லைகள் அவசியம். அடிக்கடி கோபம் வெளிப்படும்போது, அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை அமைதியாகவும் தெளிவாகவும் தெரிவிக்க வேண்டும். அவர் அப்படி அமைதியாகி மாற்றங்களை வெளிப்படுத்த ஆரம்பித்தால், நன்றி சொல்லலாம்.

இவையெல்லாம் செய்த பின்பும் அவரின் செயல்பாடுகள் அப்படியே இருந்தால், அந்தக் கோபம் தொடர்ந்து குடும்பத்தின் அமைதியைப் பாதிக்க ஆரம்பித்தால், அதை அலட்சியம் செய்யாமல் உளவியல் ஆலோசகரின் உதவியை நாடுவது நல்லது.
சரியான வழிகாட்டுதலால் இந்த நடத்தை மாற்றப்பட முடியும். பயம் இருக்கும் இடத்தில் அன்பு நீண்ட காலம் நிலைக்காது. புரிதல் இருக்கும் இடத்தில்தான் உறவு வளரும்” என்று விளக்கினார்.
வாசகர்களே இந்தப் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளையும் கமென்ட்டில் பதிவு செய்யலாமே…
வாசகர்களே, இதே போல் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், உறவு பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டுமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். di*****@*****an.com என்ற மின்னஞ்சளுக்கு ‘பேசும் மனது’ என Subject – ல் குறிப்பிட்டு உங்கள் அனுப்பவங்கள், சிக்கல்கள், பிரச்னைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படும்! தேர்ந்தெடுக்கப் படுபவை உரிய தீர்வுகளுடனும், நிபுணர்களின் வழிகாட்டுத்கலுடனும் விகடன் தளத்தில் வெளியாகும்.!
