தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (23.03.2026) நடைபெற்றது. அதன்படி, அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்தனர்.
அதில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வைக்கின்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமமாக நடைபெற்றது. அதன்படி பா.ஜ.கவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, பா.ம.கவுக்கு 18 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எங்கள் கூட்டணியில் இருக்கின்ற பல கட்சிகளோடு இன்னும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் சுமூமாக பேச்சுவார்த்தை முடிவு பெற்று அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதி என்று அறிவிக்கப்படும்
வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைய முதலமைச்சர், திராவிட முன்னேற்ற கழக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியில் அங்கம் வைக்கின்ற கட்சி தலைவர்கள் எல்லாம் எங்களுடைய கூட்டணி பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரைக்கும் ஒரு உணர்வு பூர்வமாக அமைக்கப்பட்ட கூட்டணியில் 234 இடங்களிலே 210 இடங்களில் நிச்சயமாக வெல்லும். எங்களுடைய கூட்டணி அதிக இடங்களை வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். அனைத்திய நாங்களோ எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுடைய தலைவர்களோ டெல்லிக்கு சென்றால் திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்புவது முதலமைச்சருடைய வாடிக்கையாக இருக்கின்றது. ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதன் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைக்கப்பட்டு அவ்வப்போது எங்களுக்குள் இருக்கின்ற கருத்து பரிமாறுவதற்காக நாங்கள் டெல்லி செல்கிறோம். ஆனால் முதலமைச்சர் தோல்வி பயத்தின் காரணமாக டெல்லி சென்றாலே பயப்படுகிறார், அச்சப்படுகிறார். டெல்லி சென்று நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறோம்” என்று கூறினார்.
