தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுவை ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி (23.04.2026) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (23.03.2026) நடைபெற்றது. இதற்காகத் தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று காலை 10 மணியளவில் சென்னைக்கு வருகை தந்தார். இதனையடுத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நோக்கில் பியூஷ் கோயல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான ‘எம்.ஜி.ஆர் மாளிகையில்’ அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பின் போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். அதே சமயம் கூட்டணிக் கட்சித் தலைவர்களான பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
