‘நடிப்பை விட்டு விலக முடிவெடுத்தேன்’ – ஸ்ரீ லீலா பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்

‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து ஸ்ரீ லீலா நடிப்பில் ‘உஸ்தாத் பகத் சிங்’ என்ற தெலுங்கு படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பவன் கல்யாண், ராஷி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 19ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனிடையே பட விளம்பர பணிகளில் ஸ்ரீ லீலா பிஸியாக இருக்கிறார். 

அந்த வகையில் அவர் கொடுத்த பேட்டியில் ட்ரோல்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதாவது சமூக வலைதளத்தில் செய்யப்படும் ட்ரோல்களை எப்படி கையாளுகிறீர்கள், அதைப் பற்றி பயப்பட்டு இருக்கிறீர்களா என்று கேட்கப்பட்ட நிலையில் அதற்கு நடிப்பை விட்டு விலக முடிவெடுத்ததாக ஒரு அதிர்ச்சிகரமான பதிலை அளித்தார். அவர் கூறியதாவது, “நான் சினிமாவுக்கு முதலில் வந்தபோது அதைப் பற்றி பயந்தேன். அப்போது மிகவும் வருத்தமாக இருக்கும். அதை நினைத்து அழவும் செய்தேன். 

என் அம்மாவிடம் கூட, ‘என்னால் இதைச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. நான் மீண்டும் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லட்டுமா?’ என்று கேட்டேன். அப்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவளாக இருப்பேன், ஆனால் இப்போது அதிலிருந்து விடுபட்டுவிட்டேன். இன்றைய மக்களுக்குத் அவர்களுக்கென ஒரு அறிவாற்றல் இருப்பதாக நினைக்கிறேன். அதனால், அவர்கள் நெகட்டிவிட்டியை பார்க்கும் போது, சற்று சிந்திக்கிறார்கள்” என்றார். 

Source link