ஐபிஎல்-இல் 5 முறை கோப்பையை வென்றிருக்கும் சிஎஸ்கே, 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகி வருகிறது.
வருகின்ற மார்ச் 28ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் காண இருக்கிறது.
சென்னை அணி எப்போதும் மூத்த மற்றும் அனுபவ வீரர்களை நம்பியிருப்பதில் பெயர் பெற்றிருந்தாலும், இந்த முறை பல இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
கார்த்திக் சர்மா
ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவிற்கு 20 வயதே ஆகிறது. இவரை சிஎஸ்கே 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
தன்னுடைய அதிரடி பேட்டிங்கிற்காக கவனம் பெற்ற கார்த்திக் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்போன அறிமுக வீரர் என்ற சாதனை படைத்திருந்தார்.
அதிரடி பேட்டராக அறியப்படும் இவர், கடந்த ரஞ்சி சீசனில் உத்தரகாண்ட்டுக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார்.

அதேமாதிரி, கடந்த விஜய் ஹசாரே தொடரிலும் 400+ ரன்களைச் சேர்த்து ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரராக வந்தார்.
ராஜஸ்தான் அணிக்காக 11 டி20 போட்டிகளில் விளையாடி இதுவரை 27 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 316 ரன்கள் அடித்து விளாசியிருக்கிறார்.
ஃபினிஷர் ரோலில் மிகச்சிறப்பாக தன்னை பொசிஷன் செய்து வரும் கார்த்திக் சர்மா தோனியின் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசாந்த் வீர்
கார்த்திக் சர்மாவைப் போலவே சிஎஸ்கே-வில் கவனம் ஈர்க்கும் மற்றொரு வீரர் பிரசாந்த் வீர். இவரையும் சிஎஸ்கே நிர்வாகம் 14.20 கோடி ரூபாய்க்கு தான் வாங்கியது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர், உத்தரப்பிரதேச டி20 லீக்கில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை வென்றிருக்கிறார்.

முக்கியமான போட்டிகளில் ஃபினிசிங் வீரராக மாறி பல போட்டிகளை அணிக்காக முடித்துக்கொடுத்திருக்கிறார்.
இவருடைய பவுலிங் சிஎஸ்கேவில் இருக்கும் ஜடேஜாவிற்கான வெற்றிடத்தை நிரப்பும் என்றும் 2026 ஐபிஎல் தொடரில் நேரடியாக பிளேயிங் 11-ல் பிரசாந்த் வீர் விளையாடுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படேல்
கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் வரிசையில், சிஎஸ்கேவில் கவனத்தை ஈர்த்திருக்கும் மற்றொரு வீரர் உர்வில் படேல்.
குஜராத்தைச் சேர்ந்த 27 வயதான உர்வில் படேல், உள்நாட்டுப் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவர்.
குறிப்பாக, 2023-ல் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் வெறும் 41 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தவர்.

சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் அல்லது மிடில் ஆர்டரில் ஒரு எக்ஸ்-ஃபேக்டர் வீரராக இவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனிலும் உர்வீல் படேல் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
