விபத்தில் சிக்கி மான் உயிரிழப்பு : தண்ணீர் தொட்டிகள் அமைக்கக் கோரிக்கை!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை சராசரியாக பெய்திருந்தாலும் இப்போதே ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அதே போல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளுக்கும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. இதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைல மரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் தற்போதைய வெப்பத்தை தாங்க முடியாமல் இந்தக் காடுகளில் உள்ள மான்கள் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்கு செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதே போல தண்ணீர் தேடி சாலையை கடக்க முயலும் போது வாகனம் மோதி பலியாகிறது. கீரமங்கலத்தில் கடந்த ஆண்டு தண்ணீர் தேடிச் சென்ற மான் சாலையை கடக்கும் போது ஏற்பட்ட விபத்தில் பலியான அதே பகுதியில் இன்று (23.03.2026) காலை ஒரு பெரிய மான் வாகன விபத்தில் சிக்கி பலியானது. இதே போல புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது.

ஆகவே, கோடை காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றிதிரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இறையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடை காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் தான் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். 

கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுங்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவம் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும், விவசாயிகளும். மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. மீண்டும் தொட்டிகள் அமைத்து தண்ணீர் வைத்தால் வன உயிரினங்களை காப்பாற்றலாம்.

Source link