மதுரை அவனியாபுரம் அருகே குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய 12 பேர் மீது பெட்ரோல் குண்டு வீசி, 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராமநாதபுரம் பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் குருபூஜை ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில், கடந்த 2012ஆம் ஆண்டு இந்த குருபூஜை விழாவில் பங்கேற்றுவிட்டு இளைஞர்கள் சிலர் மதுரையை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வளையங்குளம் ரிங் ரோடு பகுதியில் மறைந்திருந்த மர்ம கும்பல், அந்த இளைஞர்கள் சென்ற வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் வாகனம் தீப்பற்றி எரிந்து வாகனத்தில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, பெட்ரோல் குண்டுகளை வீசிய மணிகண்டன், ராமர் பாண்டி, சந்திரசேகர், முத்து விஜய், கார்த்திக், முத்துக்கருப்பன், சந்தோஷ், மோகன், விக்கி, சோனையா ஆகிய 11 பேரை கைது செய்தனர். இந்த வழகு மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வழக்கு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனிடையே, ராமர் பாண்டி, முத்து விஜய் ஆகியோர் கொலை செய்யப்பட்டு இறந்துவிட்டனர். இருவர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 9 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கரூர் மாவட்ட நீதிபதி இளவழகன் முன்பு இன்று (23-03-26) விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், பெட்ரோல் குண்டுகளை வீசி 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். மேலும், நாளை மறுதினம் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.
