டெங்கு பரவல் அதிகரிப்பதால் தடுப்பு நடவடிக்கை அவசியம்; சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அதீத வெப்ப நிலை, சீரற்ற மழைப் பொழிவு, வானிலையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் மற்றும் வைரஸ் பரவல் ஆகியவை, டெங்கு காய்ச்சலைப் பரப்பும், ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கின்றன.

வழக்கமாக உள்ள கண்காணிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில், இது கூடுதல் சவாலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் தீவிரமாக இருந்தது.

உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் காரணமாக, கடந்தாண்டு பாதிப்பு விகிதமும், இறப்பு எண்ணிக்கையும் குறைந்தது. இந்தாண்டு பாதிப்பு பரவ துவங்கியிருக்கும் நிலையில், கடந்தாண்டு போல், டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

அதன்படி, பாதிப்பு விபரங்களை உடனுக்குடன் தெரியப்படுத்துதல் அவசியம். நோய் பரப்பும் பூச்சிகள், கொசுக்களை கண்காணித்து, அவற்றின் உற்பத்தியை குறைக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம். அரசு மருத்துவமனைகளில், டெங்கு பரிசோதனைகளை கட்டணமில்லாமல் செய்வதற்கான கட்டமைப்பு தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

குறிப்பாக, பரிசோதனை உபகரணங்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பு வைத்திருத்தல் வேண்டும். கொசு உற்பத்திக்கு இடமளிக்காத வகையில் வீடுகள், தொழில் நிறுவன வளாகங்களை பராமரிக்கவும், அவற்றை கண்காணித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link