நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வயல் பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாங்குநேரி இட்டமொழி அடுத்துள்ள இலங்கையாடிகுளம் மற்றும் வேலாயுதபுரம் ஆகிய காட்டுப்பகுதியில் விவசாயிகளின் மின்சார தேவைக்காக இரண்டு டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அந்த பகுதிக்கு இரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஸ்பேனர், கயிறு உள்ளிட்டவற்றை வைத்து இரண்டு டிரான்ஸ்பார்மர்களையும் கழட்டி வாகனத்தில் வைத்து திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
காலையில் சென்று பார்த்தபோது அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் கம்பம் மட்டும் நின்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மின்சாரத்துறை சார்பாக திசையின்விளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கீழே கிடந்த ஸ்பேனர் உள்ளிட்ட பொருட்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் போலீசாரின் விசாரணையை அடுத்து இந்த சம்பவத்தில் கண்ணன், பாலாஜி, ஆத்திசெல்வன், அந்தோணி ராபர்ட், பாஸ்கர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
