நிலத்திற்கு பட்டா வழங்க ரூ.50,000 லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது

நமது நிருபர்

பட்டா வழங்க 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தவர் பிரபு, 42. இவர், தண்டலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி சாலம்மாள், 60 என்பவர், தன் 7 சென்ட் நிலத்தை, உட்பிரிவு செய்து பட்டா வழங்க, பிரபுவை நாடியுள்ளார்.

இதற்கு, லஞ்சமாக 1 லட்சம் ரூபாயை பிரபு கேட்டுள்ளார். பின், பேரம் பேசி 50,000 ரூபாயாக மாற்றியதாக கூறப்படுகிறது. பணம் தர விருப்பமில்லாத சாலம்மாள், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய, 50,000 ரூபாயை எடுத்து கொண்டு, கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க சாலம்மாள் சென்றார். அங்கு, பிரபு இல்லாததால், அவரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர், சிறுபுழல்பேட்டை வீட்டில் இருப்பதாக தெரிவித்து, எதிரே வசிக்கும் பாபு, 62, என்பவரிடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார். அதன்படி, பாபுவிடம், 50,000 ரூபாயை கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் பாபுவை கைது செய்தனர். பின், வீட்டில் இருந்த பிரபுவை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜெயகுமார் தலைமையிலான போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அனுப்புங்கள் வாசகர்களே!

லஞ்சப் பேர் வழிகளை அம்பலப்படுத்த, ‘லஞ்சம் – என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் ‘தினமலர்’ இதழில் வெளியாகும். இப்பகுதிக்கு தகவல் தெரிவிக்கும் வாசகர் பெயர், பிற விவரங்கள் வெளியாகாது. ரகசியம் காக்கப்படும். ‘எனது பெயரை வெளியிடலாம்’ என, துணிச்சலாகச் சொல்லும் வாசகரின் விவரம் மட்டும் வெளியாகும்.

மறக்காமல் அதையும் கடிதத்திலேயே குறிப்பிடுங்கள். e-mail:cb********@*******ar.In, 95666 97267 என்ற நம்பரில் வாட்ஸ்அப், அரட்டை செயலிகள் வழியாக வாசகர்கள் தகவல் அனுப்பலாம். தபாலில் அனுப்ப… ‘லஞ்சம் என்னிடம் பறித்தனர் பகுதி’, ‘தினமலர், டி.வி.ஆர்.ஹவுஸ், சுந்தராபுரம், கோவை.

Source link