டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழிந்ததுடன், ஹார்முஸ் ஜலசந்தியின் கூட்டு மேலாண்மை குறித்து, அமெரிக்க

டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழிந்ததுடன், ஹார்முஸ் ஜலசந்தியின் கூட்டு மேலாண்மை குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்தை ஈரான் கேலி செய்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அணுசக்தி காரணங்களுக்காக அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த மாதம் 28ம் தேதி முதல் போர் தொடுத்து வருகின்றன. இப்போரில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் பல உயர் ராணுவத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

மூன்று வாரங்களை கடந்து போர் தொடரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய முனையமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்தது.

இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை கைவிட, 48 மணி நேர கெடுவை விதித்தார் டிரம்ப். இந்நிலையில், ஈரானுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த டிரம்ப், அடுத்த 5 நாட்களுக்கு ஈரான் மீது எவ்வித தாக்குதலும் நடத்தப்படாது என கூறினார்.

டிரம்பின் கருத்தை மறுத்துள்ள ஈரான் பேச்சு ஏதும் நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது.இஸ்ரேலின் முக்கிய நகரங்களான டெல் அவிவ், ஹைபா, ஈலாட் மற்றும் டிமோனா அணுசக்தி மையம் அமைந்துள்ள பகுதிகளை இலக்காக கொண்டு பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஈரான் ஏவியது. இஸ்ரேலும் பதிலுக்கு ஈரானின் முக்கிய இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரானுடன் அமெரிக்காவும் இணைந்து நிர்வகிப்பது குறித்து தன் விருப்பத்தை டிரம்ப் தெரிவித்திருந்தார். இக்கருத்தை கேலி செய்யும் விதமாக தென்னாப்ரிக்காவில் உள்ள ஈரான் துாதரகம், சமூக வலைதளத்தில் ஒரு படத்தை பகிர்ந்துள்ளது. அதில், ஒரு காரின் டிரைவர் சீட் அருகே, குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் ஸ்டீரிங் வீல் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. இது ஈரானுடன் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியை தானும் கட்டுப்படுத்த முடியும் என டிரம்ப் தெரிவித்த கருத்தை ஏளனம் செய்வது போல் அமைந்திருந்தது.

டிரம்ப் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் உறுதியாக இருப்பதாகவும், ஆனால், புதிய சுற்று பேச்சில் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை எனவும் பெயர் வெளியிட விரும்பாத மூன்று மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதற்கான டிரம்பின் முயற்சி குறித்து விவாதிக்க, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Source link