சென்னை: அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை, தினமும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும் என,

சென்னை: அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை, தினமும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா நகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர், பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.

அப்போது, தங்களை இன்ஸ்பெக்டர் தாக்கியதாகவும், வாலிபரின் பெயரை புகாரில் இருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோர் பேசிய வீடியோ வெளியானது.இந்நிலையில், கடந்த 2024ல், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து, விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் உத்தரவிட்டிருந்தது. அதன் பின், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு கோரியும், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் புலன் விசாரணை மற்றும் வழக்கின் விசாரணை, ‘போக்சோ’ சட்ட விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும்.

சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு, பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கை தினந்தோறும் விசாரித்து, சென்னை ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 4 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இறுதி இழப்பீட்டு தொகையை, வழக்கின் இறுதி தீர்ப்பு அளிக்கும் போது, சிறப்பு நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.

மேலும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கையை சுதந்திரமாக மேற்கொண்டு, மாநில அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link