கேரளம் மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 அன்று நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், அம்மாநிலத்தில் தேர்தல் களத்தில் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகள் பரபரப்பாக உள்ளது. மேலும் ஆட்சியைக் கைப்பற்ற அனைத்து கட்சிகளும் மும்மரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், குருவாயூர் தொகுதி வேட்பாளருமான பி.கோபாலகிருஷ்ணன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் ‘‘சர்​வ​தேச அளவில் புகழ்​பெற்ற ஆன்​மிகத் தலமான குரு​வாயூரில் கடந்த 50 ஆண்​டு​களாக ஏன் ஒரு இந்து சட்​டப்பேரவை உறுப்​பினராக கூட தேர்ந்​தெடுக்​கப்​பட​வில்​லை? குருவாயூரின் புனித மண் மற்​றும் அதன் அடை​யாளத்தை மீண்​டும் மீட்டெடுக்க வேண்​டும். எனவே, இந்த குருவாயூர் தொகுதியில் ஒரு இந்து தான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று பேசி​யிருந்​தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் மதம் குறித்துப் பேசியிருந்தது, அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவியது. இதையடுத்து, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டப் பிரிவு 123 (3) மற்​றும் தேர்தல் நடத்தை விதி​களின் கீழ் கோபால​கிருஷ்ணன் மீது வழக்​குப் பதிவு செய்ய திருச்​சூர் மாவட்ட ஆட்​சி​யருக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. சாதி அல்​லது மத உணர்வுகளைத்தூண்டி வாக்கு சேகரிப்​ப​தைத் தேர்தல் நடத்தை விதி​கள் தடை செய்​கின்​றன.
சர்ச்​சைக்​குரிய அந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. மேலும், குரு​வாயூர் கோயில் காவல் நிலையத்​தில் இது சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்​ளது” என்று தெரி​வித்​துள்​ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
