புதுடில்லி: இந்திய பெண்கள் ‘டி-20’ அணியில் அனுஷ்கா சர்மா அறிமுக வாய்ப்பு பெற்றார்.
இங்கிலாந்து, வேல்சில் ஐ.சி.சி., பெண்களுக்கான ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன்-ஜூலை மாதம் நடக்க உள்ளது. 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்குத் தயாராகும் வகையில், தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய பெண்கள் அணி, ஐந்து போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்க உள்ளது.
வரும் ஏப். 17ல் துவங்கும் இத்தொடரில், போட்டிகள் டர்பன், ஜோகனஸ்பர்க், பேனோனியில் நடக்க உள்ளன. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தின் 22 வயது வீராங்கனை அனுஷ்கா சர்மா, அறிமுக வாய்ப்பு பெற்றார். பெண்கள் பிரிமியர் தொடரில் குஜராத் அணிக்காக (ரூ. 45 லட்சம்) விளையாடிய இவர், 7 போட்டியில் 177 ரன் எடுத்தார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் (1), ஒருநாள் (6) போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் காஷ்வீ 22, முதன் முறையாக ‘டி-20’ அணியில் அறிமுக வாய்ப்பு பெற்றார்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் ‘டி-20’ தொடரை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற கமலினி, ஸ்னே ராணா, அமன்ஜோத் கவுர், வைஷ்ணவிக்கு இடம் கிடைக்கவில்லை.
அணி விபரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), ஜெமிமா, தீப்தி, ரிச்சா, அருந்ததி, ரேணுகா, கிராந்தி, ஸ்ரீ சரணி, ஷ்ரேயான்கா, காஷ்வீ, பார்தி, உமா, அனுஷ்கா.
