நாட்டின் பாதுகாப்பு தயார்நிலை: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் ஆய்வு

புதுடில்லி: மேற்காசியாவில் நடக்கும் போரால் நாட்டின் பாதுகாப்பு தயார்நிலைகளில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தலைநகர் டில்லியில் பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதில், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், முப்படைகளின் தளபதிகள், ராணுவ செயலர், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தற்போதைய உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலவரங்கள், மேற்காசிய மோதல் தீவிரமடைந்தால் நாட்டின் நலன்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அதிகாரிகள் விளக்கினர்.

மேலும், இந்த மோதலால் ராணுவத்துக்கான வினியோகத் தொடர், கொள்முதல், உற்பத்தி மற்றும் தற்போதுள்ள தளவாடங்களின் பராமரிப்பு ஆகியவற்றில் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்த, தற்போது நடக்கும் மோதல்களிலிருந்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்பப் பாடங்களை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

அடுத்த, 10 ஆண்டுகளுக்கான விரிவான ஒருங்கிணைந்த தொலைநோக்கு திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். இதில் கற்றுக் கொண்ட பாடங்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மனதில் வைத்து, ‘சுயசார்பு இந்தியா’ என்ற கொள்கையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source link