சென்னை:-ஏற்றுமதி தடை, விளைச்சல் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மல்லிகைப்பூ விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், சென்ட் தயாரிக்கும் கம்பெனிகள் கூடுதலாக கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம், சத்தி மலர் உற்பத்தியாளர்கள் – விவசாயிகள் தலைமை சங்க செயலர் சிவலிங்கம் கூறியதாவது:
தமிழகத்தில் சத்தியமங்கலம், நிலக்கோட்டை, மதுரை, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 32,000 ஹெக்டேரில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்படுகிறது.
நாட்டின் 80 சதவீத மல்லிகைப்பூ தமிழகத்தில் உற்பத்தியாகிறது. தமிழகத்திலிருந்து மலேஷியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு மல்லிகைப்பூ அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேற்காசிய போரால் மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி, மற்ற நாடுகளுக்கும் மல்லிகைப்பூ அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், விளைச்சலும் அதிகரித்துள்ளதால் சத்தியமங்கலம் மலர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 15 டன் மல்லிகைப்பூ வருகிறது. ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், ஒரு படி 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிலோ பூ 700 – 800 ரூபாய்க்கு விற்பனையானால்தான் உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கும். சென்ட் தயாரிக்கும் கம்பெனிகள், ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தியாளர்களிடமிருந்து மல்லிகைப்பூவை வாங்குகின்றன. கூடுதலாக பூக்களை வாங்கினால் உற்பத்தியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மல்லிகை விலை
1 கிலோ ரூ.400
எதிர்பார்க்கும் விலை
ரூ.800
நாட்டின் மல்லிகைப்பூ உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு
80%
தமிழகத்தில் செயல்படும் சென்ட் கம்பெனிகள்
50
அதிக சென்ட் கம்பெனிகள் உள்ள மாவட்டங்கள்
கோவை, சென்னை, திண்டுக்கல்
