அறிவியலில் பெண்கள் – விக்சித் பாரதத்தை ஊக்கிவித்தல் என்ற கருப்பொருளின் கீழ் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் தேசிய அறிவியல் தினம் 2026 கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் ஆர். சிங்காரவேல் வரவேற்புரை ஆற்றினார். துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எஸ். அறிவுடைநம்பி தலைமை தாங்கி பேசுகையில், பல்துறை ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய பல்லுயிர் ஆணையத்தின் முன்னாள் செயலாளர் கே. வெங்கட்ராமன், அறிவியலின் அன்றாட வாழ்விலான முக்கியத்துவத்தையும், மாணவர்கள் கருத்துணர்வுடன் கற்க வேண்டிய அவசியத்தையும் அறிவியலில் பெண்களின் வளர்ச்சி குறித்து வீடியோ மற்றும் படத்துடன் விளக்கி கூறினார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு துறைவாரியான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிறந்த நிதி திரட்டல் விருதுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. பல்கலைக்கழக புல முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். அறிவியல் புல முதல்வர் எஸ். ஸ்ரீராம் நன்றியுரை வழங்கினார்.
