டென்னிஸ்: அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

மயாமி: அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில், உலகின் ‘நம்பர்-1’ வீரர், ஸ்பெயினின் அல்காரஸ் 22, அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை 25, (‘நம்பர்-36’) சந்தித்தார். சமீபத்தில் ‘கேரியர் கிராண்ட்ஸ்லாம்’ (தொடர்ந்து நான்கு கிராண்ட்ஸ்லாம்) பட்டம் வென்று அசத்திய அல்காரஸ், 3-6, 7-5, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

பஹாமஸ் வீராங்கனை சாதனை

டோருன்: போலந்தில் டோருன் நகரில் உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. பெண்களுக்கான 60 மீ., தடை ஓட்டம் நடந்தது. பஹாமஸ் வீராங்கனை தேவ்னே சார்ல்டன், 7.65 வினாடியில் வந்து, உலக சாதனையை சமன் செய்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதற்கு முன் கடந்த 2024ல் இவர், 7.65 வினாடியில் சாதித்து இருந்தார்.

நெதர்லாந்தின் நாடின் விஸ்செர் (7.73), போலந்தின் பியா ஸ்கிர்ஜிஜோவ்ஸ்கியா (7.73) என இருவரும் அடுத்த இரு இடம் பெற்றனர்.

கால்பந்து: ரியல் மாட்ரிட் அபாரம்

மாட்ரிட்: ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் அத்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. இதுவரை பங்கேற்ற 29 போட்டியில் ரியல் மாட்ரிட் அணி, 22 வெற்றியுடன் (3 ‘டிரா’, 4 தோல்வி), 69 புள்ளி எடுத்து, பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அத்லெடிகோ மாட்ரிட் (57 புள்ளி), 4வது இடம் பெற்றுள்ளது.

எக்ஸ்டிராஸ்

ஆசிய கோப்பை வில்வித்தை (‘ஸ்டேஜ் 1’) தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடக்கிறது. தீபிகா குமாரி, ஜோதி என முன்னணி வீராங்கனைகள் இல்லாத நிலையில் இந்திய அணியில் கீர்த்தி, அன்ஷிகாவுடன், அனுபவ ரஜத் சவுகான், பிரதமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆசிய அணிகளுக்கான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஏப். 14-18ல் நடக்க இருந்தது. தற்போது வளைகுடா பகுதியில் நடக்கும் போர் காரணமாக இத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்திய ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ்’ ஜாம்பவான் ஹரி சிங் 59. தேசிய ‘ரேலி’ சாம்பியன்ஷிப்பில் 5 முறை கோப்பை வென்றுள்ளார். ஆசிய மண்டல ரேலி சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்தியர். மாலத்தீவு அருகில் உள்ள பெலித்ஹூ தீவு பகுதியில் அதிவேக படகில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் ஹரி சிங் மரணம் அடைந்தார். பவளப்பாறை பகுதிகளில் இவரது உடலை தேடும் பணி நடக்கிறது.

அமெரிக்காவின் அரிசோனாவில் எல்.பி.ஜி.ஏ., பவுண்டர்ஸ் கோப்பை கோல்ப் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் பங்கேற்ற அதித்தி அசோக், மொத்தம் 280 ஸ்டிரோக்குள் பெற்று, 14வது இடம் பிடித்தார்.

தைவானில் நடந்த சன் மூன் லேக் சர்வதேச போட்டியில் இந்தியாவின் தேவ் குமார் மீனா, 5.40 மீ., துாரம் தாவி, வெண்கலம் வென்றார். தவிர இது புதிய தேசிய சாதனை ஆனது. பெண்கள் பிரிவில் இந்தியாவின் நிதிகா (3.95 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார்.

Source link