-டில்லி சிறப்பு நிருபர்-திரிணமுல் காங்கிரசின் தேர்தல் வியூக நிறுவனமான, 'ஐபேக்' அலுவலகத்தில் அமலாக்கத்துறை

-டில்லி சிறப்பு நிருபர்-

திரிணமுல் காங்கிரசின் தேர்தல் வியூக நிறுவனமான, ‘ஐபேக்’ அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை முதல்வர் மம்தா பானர்ஜி தடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று காரசார விவாதம் நடந்தது. ‘விசாரணைக்கு முதல்வரே முட்டுக்கட்டை போட்டால், அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில போலீசாரிடம் அமலாக்கத்துறை தீர்வு கோருவது எப்படி சரியாக இருக்கும்?’ என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கடந்த ஜனவரி 8ம் தேதி கொல்கட்டாவில் உள்ள, ‘ஐபேக்’ அலுவலகம் மற்றும் அதன் தலைவர் பிரதீக் ஜெயின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று சோதனையைத் தடுத்ததாகவும், சில கோப்புகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை எடுத்துச் சென்றதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக சி.பி.ஐ.,விசாரணைக் கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறியதாவது:

முதல்வர் ஒரு சோதனையைத் தடுக்கிறார் என்று குற்றம்சாட்டப்படும் போது, அதே முதல்வர் தலைமையிலான மாநில அரசிடம் சென்று புகார் அளிப்பது எப்படிச்சரியான தீர்வாக இருக்கும்? அமலாக்கத்துறை அதிகாரிகள் என்பதற்காக அவர்கள் இந்தியக் குடிமக்களாகத் தொடர மாட்டார்கள் என்று அர்த்தமா? அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது உச்ச நீதிமன்றத்தை அணுக அவர்களுக்கு உரிமை உண்டு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் ஷியாம் திவான் வாதிடுகையில், ‘அமலாக்கத்துறை என்பது ஒரு தனிநபர் அல்ல, அது ஒரு அரசு அமைப்பு. எனவே, அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி அரசமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் மனு தாக்கல் செய்ய அந்த அமைப்பிற்கு அதிகாரம் இல்லை. இது போன்ற புகார்களை மத்திய அரசு நேரடியாக 131-வது பிரிவின் கீழ் மட்டுமே கொண்டு வர முடியும்’ என்றனர்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link