பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் டில்லி பட்ஜெட்டில் ரூ.5,110 கோடி ஒதுக்கீடு

புதுடில்லி:டில்லி மாநிலத்தில் வாழும் தகுதியுள்ள பெண்களுக்கு, மாதம்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும். இதற்காக, வரும் பட்ஜெட்டில், 5,110 கோடி ரூபாயை ஒதுக்கி, முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.

வரும், 2026 – 27 ம் ஆண்டுக்கான, 1,03,700 ரூபாய் வரவு – செலவு கணக்கை, டில்லி சட்டசபையில், நிதியமைச்சர் பொறுப்பையும் கூடுதலாக வகிக்கும் முதல்வர் ரேகா குப்தா, இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்களாவன:

மூன்று இன்ஜின் கொண்ட அரசாக, டில்லி மாநில அரசு வேகமாக முன்னேறி வருகிறது. நாட்டின் மூன்றாவது பெரிய தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமாக டில்லி விளங்குகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, 21 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்புற மேம்பாட்டிற்கு 7,887 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு 5,921 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் துாசி கிராமப்புற மேம்பாட்டிற்கு, 787 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சி பகுதியில் சாலை மேம்பாட்டிற்கு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் துாசுகளை அகற்ற, 1,352 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நஜப்கார் ஓடைகள் வழியாக சாலைகள் அமைக்க, 454 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டிற்கு, 350 கோடி ரூபாய்; டில்லி தலைமைச் செயலகம் கட்டவும், தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.

மின் துறைக்கு, 3,942 கோடி ரூபாய்; நிலத்தடி மின் ஒயர்களை மாற்ற, 200 கோடி ரூபாய்; தீயணைப்புத்துறைக்கு, 674 கோடி ரூபாய்; டில்லி ஜல் வாரியத்திற்கு, 9,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தின் போது நீர் தேங்குவதை சரி செய்ய இந்த அரசு கடுமையாக பாடுபடுகிறது. வெள்ள நீர் சாகுபடிக்கு, 610 கோடி ரூபாய்; சுகாதாரத்துறைக்கு, 12,645 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருநம்பியர் மற்றும் திருநங்கையர் மேம்பாட்டிற்காக இந்த அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின் கீழ், இந்த பிரிவினருக்கு மருத்துவ காப்பீடு வழங்க, 202 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.

முந்தைய ஆம் ஆத்மி அரசால் பாதியில் விடப்பட்ட ஏழு அரசு மருத்துவமனைகளின் அவசர கால பிரிவிற்கு, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை வைத்து, இந்த மருத்துவமனைகள் புனரமைக்கப்படும். மேலும், 750 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் எனும் மருத்துவமனைகள் அமைக்க, 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாத சைக்கிள்கள் வழங்க, 1.30 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க, 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வித்துறைக்கு, 19,148 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஒருங்கிணைந்த நகரம் ஸ்டார்ட் அப் கொள்கைக்காக பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நரேலாவில், ஒருங்கிணைந்த கல்வி நகரம் அமைக்கப்பட உள்ளது. எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினர் மேம்பாட்டிற்காக, 227 கோடி ரூபாயை ஒதுக்கி, முதல்வர் ரேகா குப்தா நேற்று உத்தரவிட்டார்.

பெண்கள் பாதுகாப்பாக பஸ்களில் பயணம் செய்ய பல திட்டங்களை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பெண்களின் இலவச பஸ் பயணத்திற்கு, 406 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் மேம்பாட்டிற்காக, ஆயிரம் பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட உரிமம் வழங்க, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு, மாதம்தோறும், 2,500 ரூபாய் வழங்கப்படும். அதற்காக, மாநில அரசின் வரவு – செலவு திட்டத்தில், 5,110 கோடி ரூபாயை ஒதுக்கி, முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், அடல் கேன்டீன்களில் ஆண், பெண்களுக்கான ஓய்வறைகள் கட்டப்படும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனங்களுக்கான கொள்கை வகுக்க, 200 கோடி ரூபாய்; நீதித்துறை மேம்பாட்டிற்காக, 230 கோடி ரூபாய்; புதிய வனப்பகுதிகளை ஏற்படுத்த, 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

டில்லி சட்டசபையில் நேற்று காலை, 10:00 மணிக்கு முதல்வர் ரேகா குப்தா, வரும் நிதியாண்டிற்கான வரவு – செலவு கணக்கை தாக்கல் செய்ய இருந்த நேரத்தில், காலை, 7:28 மணிக்கு சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் இ – மெயில் வந்தது. அடுத்த, 20 நிமிடங்களில் சபாநாயகர் விஜேந்தர் குப்தாவுக்கு அதே போன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்தது .

அந்த கடிதங்களில், ‘சட்டசபை வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதால், எந்த நேரமும் அவை வெடித்து சிதறும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, அந்த வளாகத்தில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் போலீசார் குவிக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.

முதற்கட்ட சோதனையில், வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், காலை, 10:00 மணிக்கு முதல்வர் ரேகா குப்தா, தன் பட்ஜெட் உரையை வாசிக்கத் துவங்கினார். எனினும், தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், அந்த இ – மெயில் தகவல் மிரட்டல் என்பது தெரிய வந்தது. போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இலவசங்கள் இனியில்லை

வரும், 2026 – 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, பசுமை பட்ஜெட் என முதல்வர் ரேகா குப்தா புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும் இலவச திட்டங்கள் இனிமேல் கிடையாது என கூறியுள்ள முதல்வர், அதற்காக பல புதிய நலத்திட்ட உதவிகளை நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். அரசு வழங்கிய இலவசங்களால், 2018 – 2020ம் ஆண்டுகளில் மாநிலத்தின் வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டது என கூறியுள்ள முதல்வர் ரேகா குப்தா, இலவச கலாசாரம் இனிமேல் கிடையாது என தன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.

செமி கண்டக்டர் கொள்கை

செமி கண்டக்டர் கொள்கையை நேற்று அறிவித்த முதல்வர், ரேகா குப்தா, செயற்கை நுண்ணறிவு திட்டங்களால் மாநிலத்தின் பொருள் உற்பத்தி துறை மேம்பாடு அடையும் என கூறினார். நாடு முழுவதும், 12 ஆயிரம் எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையை மேம்படுத்த, ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். மேலும், இரண்டு செயற்கை நுண்ணறிவு தொழிலகங்களை அமைக்க, ஒரு கோடி ரூபாயையும் முதல்வர் ஒதுக்கியுள்ளார்.

ஸ்விக்கி பணியாளர்களுக்கு ஓய்வறைகள் கட்ட ஒதுக்கீடு

ஸ்விக்கி, ஓலா, உபர் போன்ற ‘கிக் வொர்க்கர்ஸ்’ எனப்படும், தற்காலிக பணியாளர்கள் சந்திக்கும் கடினமான வேலைப்பளு மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை போக்க, ஓய்வறைகள் கட்டித்தரப்படும் என முதல்வர் ரேகா குப்தா நேற்று அறிவித்தார். மேலும், தொழிலாளர் நலத்துறையிடம் பேசி, நல வாரியங்களும் விரைவில் அமைக்கப்படும் என கூறினார். மேலும், பணிக்கு இடையே சாப்பிட, ஓய்வெடுக்க தேவையான வசதிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் எனவும் கூறிய முதல்வர், அதற்காக, 100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்.

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம்

வரவிருக்கும் நிதியாண்டிற்கான வரவு – செலவு திட்டத்தில், சுகாதாரத்திற்கு, டில்லி மாநில அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. மொத்த பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில், 12.5 சதவீதம் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது, 13,034 கோடி ரூபாயாகும். இதில், அன்மால் எனும் பிறந்த குழந்தைகளை கண்காணிக்கும் அமைப்பு, 750 புதிய ஆரோக்கிய மந்திர் எனும் சுகாதார மையங்கள் மேம்பாடு, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் வென்டிலேட்டர் வசதி குறித்த தகவல், டிஜிட்டல் ரத்த வங்கி, ரத்த கொடையாளர் விவரத்தை ஆன்லைனில் வெளியீடு போன்ற பல திட்டங்கள் அடங்கும்..

Source link