திண்டுக்கல்: ''பத்து தோல்வி பெற்றவரை சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெறும் வெற்றி மூலம் படுதோல்வி பழனிசாமியாக

திண்டுக்கல்: ”பத்து தோல்வி பெற்றவரை சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெறும் வெற்றி மூலம் படுதோல்வி பழனிசாமியாக மாற்ற வேண்டும்,” என, திண்டுக்கல்லில் நடந்த திண்டுக்கல், தேனி மாவட்ட தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது : சட்டசபை தேர்தலை தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் தமிழகம் வருகிறார்கள். ஆனால் திட்டங்களோ, நிதியையோ விடுவிப்பதில்லை. மத்திய அரசின் பாரபட்ச செயல்களை எதிர்த்து செயல்படும் ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அவர்கள் அ.தி.மு.க., உள்ளிட்ட 4 கட்சிகளை அடிமைகளாக்கி தமிழகத்திற்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள். இங்கு கருப்பு சிவப்பு வேட்டி கட்டிய தி.மு.க., கடைசி தொண்டன் இருக்கும் வரை அது நடக்காது. தமிழகத்தில் டில்லி அரசியல் எடுபடாது. அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் இந்த தேர்தல் டில்லி அணிக்கும், தமிழகத்துக்குமான என போட்டி என முழக்கமிடுகிறார்.

எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி அ.தி.மு.க., அலுவலகத்திற்கு செல்வதே பரபரப்பு செய்தியாகிறது. கட்சி தலைமையகம் ராயப்பேட்டையில் இருப்பதை மறந்து டில்லிக்கு அடிக்கடி சென்று வந்தார். முன் முகத்தை மூடியபடி சென்றவர் தற்போது திறந்த முகத்துடன் செல்கிறார். அதனால் அ.தி.மு.க.,வினருக்கும் சேர்த்து நாம் தான் பேசவேண்டியிருக்கிறது.

சீசன் நேரத்தில் போலி நிறுவனங்கள் ஒரிஜினலை போன்று பொருட்களை அசெம்பிள் செய்து ஏமாற்று வேலை செய்வார்கள். அந்தவகையில் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை பா.ஜ., ‘மேட் இன் டில்லி’ பெயரில் அசெம்பிள் செய்திருக்கிறது. தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க.,வின் பியூைஸ பா.ஜ., பிடுங்கிடும். பீகாரில் பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் 10 முறை முதல்வராக இருந்தார். அவரையே அந்த பொறுப்பிலிருந்து விலக வைத்து விட்டனர். அவருக்கே அந்த நிலை என்றால் பழனிசாமி தன் நிலை என்னவென்று நினைத்து பார்க்க வேண்டும். தி.மு.க.,வுக்கு எதிராக பா.ஜ., அ.தி.மு.க., உள்ளிட்ட ‘பி’, ‘சி’ என எத்தனை ‘டீம்’ கொண்டு வந்தாலும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தான் சாம்பியன் என்றார்.

டில்லிக்கு மாறிவிட்டது பழனிசாமி அலுவலகம்: உதயநிதி கிண்டல்

மதுரை, விருதுநகர் மாவட்ட தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், மூர்த்தி, பெரிய கருப்பன், மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் உதயநிதி பேசியதாவது: இத்தேர்தலில் தி.மு.க., வெற்றிக்கு இளைஞரணியின் பணி முக்கியமானதாக இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு இளைஞரணி வலதுகரமாக உள்ளது. இத்தேர்தல் எனக்கும் ஒரு பொதுத் தேர்வு போல் தான். இதில் நாம் ‘ஜஸ்ட் பாஸ்’ ஆகாமல் சாதனை வெற்றி படைக்க வேண்டும். இதற்காக இளைஞரணி நிர்வாகிகள் பலமுறை வீடுதோறும் சென்று ஐந்தாண்டுகளில் தி.மு.க., செயல்படுத்திய திட்டங்களை விளக்கி கூறி பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி அக்கட்சியை டில்லியில் அடகு வைத்துவிட்டார். அவரது அலுவலகமே டில்லிக்கு மாறி விட்டது. இதனால் ராயப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அவர் சென்றாலே ‘பிரேக்கிங் நியூஸ்’ வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வை அவர் அடகு வைத்தாலும் அங்கிருந்தவர்களையும் சேர்த்து காப்பாற்றும் தலைவராக ஸ்டாலின் உள்ளார். 10 முறை பீகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமாரையே அந்த மாநிலத்தை விட்டு பா.ஜ., வெளியேற்றிவிட்டது. அந்த வகையில் பா.ஜ.,வுக்கு பழனிசாமியெல்லாம் சாதாரணம். ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ., படம் ஓடாது. அவர்கள் பருப்பும் இங்கு வேகாது என்றார்.

Image 1553535

உதயநிதி கார் சோதனை

திண்டுக்கல், தேனி மாவட்ட தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி நேற்று முன்தினம் இரவு காரில் திண்டுக்கல் வந்தார். அப்போது மாவட்ட எல்லையான கல்வார்பட்டி செக்போஸ்டில் அவரது காரை நிறுத்தி தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் சோதனையிட்டனர்.

Source link