எத்தனாலை சமையல் எரிபொருளாக்க வேண்டும்: உற்பத்தியாளர்களிடம் எல்.பி.ஜி., துறை கோரிக்கை

புதுடில்லி: நாட்டின் எல்.பி.ஜி., இறக்குமதி சார்பை குறைக்க, எத்தனாலை சமையல் செய்வதற்கான எரிபொருளாக உருவாக்க வேண்டும் என்று பெட்ரோலிய துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

அகில இந்திய எத்தனால் உற்பத்தியாளர் சங்க மாநாட்டில், பெட்ரோலிய தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் ரவி பேசியதாவது: எல்.பி.ஜி., சாதன ஆய்வு மையம் மற்றும் பல்வேறு ஐ.ஐ.டி., நிறுவனங்கள் ஆகியவை எத்தனாலை எரிபொருளாக கொண்ட சமையல் அடுப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அடுப்புகளின் மாதிரிகள் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமையலுக்கு எத்தனால் பயன்பாடு நடைமுறைக்கு வந்துவிட்டால் சமையல் எரிவாயு இறக்குமதியை சார்ந்திருப்பது குறைந்துவிடும். எத்தனால் உற்பத்தித்துறை, இதற்கான அடுப்பு தயாரிப்பாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதேபோல, ஒவ்வொரு வீட்டுக்கும் எத்தனால் எரிபொருள் வினியோக தொடரை கட்டுபடியாகக்கூடிய செலவில் உறுதிப்படுத்த வேண்டும்.

தற்போது, இத்துறையினர் கணிசமான அளவில் எத்தனாலை உற்பத்தி செய்து, பெட்ரோலில் கலப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றனர். இதில் மாற்றம் தேவை. எத்தனாலை நாடு தழுவிய சமையல் எரிபொருளாக மாற்றும் முயற்சியில் எத்தனால் உற்பத்தியாளர்களின் ஆலோசனைகள் எங்களுக்கு தேவை.

டீசலிலும் எத்தனால், கலப்பதற்கான ஐசோபியூட்டனால் உற்பத்தியை அதிகரிக்கவும், விமானங்களுக்கான நீடித்த எரிபொருளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எத்தனால் தயாரிப்பு துறையினர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

எத்தனால் அடுப்பு

எத்தனால், திரவ வடிவிலான எரிபொருள் ஆகும். இதனைப் பயன்படுத்த சிறப்பு அடுப்பு தேவை. ஆப்ரிக்க நாடுகளில் எத்தனால் அடுப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இவை, ஸ்வீடன் நாட்டின் ‘கேனிஸ்டர்’ தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டவை இந்த அடுப்பை, தலைகீழாகக் கவிழ்த்து , பின்புறத்தில் உள்ள வலை போன்ற உறிஞ்சும் பொருளின்மீது எத்தனாலை ஊற்ற வேண்டும். பின் அடுப்பை நேராக திருப்பி வைத்து, எரிய வைத்து பயன்படுத்தலாம். இதில் புகை வராது என்பதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது.

எத்தனால் தயாரிப்புக்கு அரிசி வினியோகம் 10% ஆக குறைக்க மத்திய அரசு திட்டம்

எத்தனால் தயாரிப்புக்கு வழங்கும் நொய் எனப்படும் குருணை அரிசியின் அளவை 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அரசு குறைத்துள்ளதாக மத்திய உணவு அமைச்சக செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20 சதவீதமாக ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக எத்தனால் வினியோகத்தை சந்தைக்குள் கொண்டு வருவதை மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.
எத்தனால் கலப்பை 20 சதவீதத்திலிருந்து அதிகரித்தல், டீசலில் எத்தனால் கலத்தல், கலப்பு எரிபொருள் வாகன தயாரிப்பை ஊக்குவித்தலில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. இதுசார்ந்த முக்கிய முடிவுகள் விரைவில் எடுக்கப்படும்.
புதிய திட்டத்தின்கீழ் 25 சதவீதத்துக்கு பதிலாக, 10 சதவீத குருணை, எத்தனால் தயாரிப்புக்கு வழங்கப்படும். இந்திய உணவு கழகத்திலிருந்து எத்தனால் துறைக்கு முழு அரிசி வழங்கப்படுவது அடுத்த ஆண்டிலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source link