கேரளம் மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 அன்று நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே, கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், கேரள பாஜக தலைவரும், நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திர சேகர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இதில், தனக்கு 93 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். மேலும், தனக்கு 107 கோடிக்குக் கடன் இருப்பதாகவும், அதே போல தன்னுடைய மனைவிக்கும் 1.62 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெங்களூர் கோரமங்களாவில் உள்ள தனது ரூ.200 கோடி மதிப்பிலான பங்களாவை, அவர் பிரமாண பத்திரத்தில் காட்டவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது .
இது குறித்து காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திர சேகர் பெங்களூர் கோரமங்களாவில் உள்ள ரூ.200 கோடி மதிப்பிலான 49000 சதுர அடி பரப்பளவில் உள்ள பங்களா குறித்து பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லை. இது நாட்டின் விலை உயர்ந்த ஒரு பகுதியில் 1.07 அமைந்துள்ள பங்களாவாகும். இது ராஜீவ் சந்திர சேகருக்கு உரிமையானது தானா? எனச் சந்தேகம் இருப்பின், ஏற்கனவே, கடந்த 2024 தேர்தலில் அவருடைய பிரமாண பத்திரத்தில் ‘408, கோரமங்களா 3 வது பிளாக்’ என்ற சொத்து விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆறு நாட்களுக்கு முன்னதாக, மார்ச் 17 அன்று இந்த பங்களாவிற்குச் சொத்துவரி செலுத்தப்பட்டுள்ளது. ராஜீவ் ஒரு தொடர் குற்றவாளி, அவர் மீண்டும் மீண்டும் தேர்தல் ஆணையத்தைத் தவறாக வழி நடத்துகிறார். எனவே, தேர்தல் ஆணையம் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, அந்த வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்யவேண்டும். இல்லையெனில், தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறதா? என்று மக்கள் கேட்கும் கேள்வி உண்மையாகிவிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
