சென்னை: தி.மு.க., கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.,வுக்கு, ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது. விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தி.மு.க., – தே.மு.தி.க., இடையே, சட்டசபை தேர்தலுக்கான தொகுதி ஒப்பந்தம் நேற்று இரவு கையெழுத்தானது. தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், இதற்கான ஒப்பந்தத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து, பிரேமலதா அளித்த பேட்டி: தே.மு.தி.க.,வுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என, இன்றும் நாளையும் பேச்சு நடத்தி முடிவு எட்டப்படும்.
வரும் 27ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்; ஏப்ரல் 1ம் தேதி மனு தாக்கல் செய்யப்படும். கூட்டணி தர்மத்தின்படி, அனைத்து கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிக்காக தே.மு.தி.க., உழைக்கும்.
தே.மு.தி.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள 25 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலை, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளோம். விஜயகாந்த் முதன் முதலில் வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதி பட்டியலில் உள்ளது.
சென்னையில் விருகம்பாக்கம் தொகுதியும், லோக்சபா தேர்தலில் விஜயபிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியும் உள்ளது. கூட்டணியில் சேர நாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கை வேறு. நாங்கள் விட்டுக் கொடுத்து தான் 10 தொகுதிகளை பெற்றிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
