துணை முதல்வர் உதயநிதி காரில் அதிரடி சோதனை; நடுரோட்டில் பரபரப்பு சம்பவம்!

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தேதியில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பணபட்டுவாடா நடக்கிறதா?, குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்குண்டானா ஆவணங்கள் உள்ளதா? என்பது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் காரில் இன்று (24-03-26) தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி, திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றாது. இந்த கூட்டத்தில் துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன் பின்னர், இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு மதுரையில் நடைபெறும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கிச் சென்றார்.

உதயநிதி ஸ்டாலினின் வாகனம் கொடைரோடு டோல்கேட்டிற்கு வந்த போது அங்கிருந்த தேர்தல் பறக்கும் படையினர், அவருடைய வாகனத்தை நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காரின் பின் பகுதியில் கார் டோரை திறந்து காரில் உள்ள அவரது உடமைகளை சோதனை செய்த பின், அந்த சோதனையில் எந்தவிதமான விதிமுறைகளை மீறிய பணமோ, பரிசுப்பொருட்களோ இல்லாததால் அந்த கார் விடுவிக்கப்பட்டது. இந்த சோதனைக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். உதயநிதியின் காரில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி எம்.எல்.ஏவுமான ஐ.செந்திகுமார் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, 

Source link