வாஷிங்டன்: ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கப்போவதில்லை என ஒப்புக்கொண்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: மூன்று வாரங்களாக நீடித்த போரில் அமெரிக்கா வெற்றி பெற்றது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக, அமெரிக்காவிற்குப் பெரிய பரிசை அனுப்பியது. ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கப் போவதில்லை என ஒப்புக்கொண்டது.
ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது. நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்குக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். நாம் தற்போது பேச்சுவார்த்தைகளில் இருக்கிறோம்.
நாம் ஈரானின் வான்பரப்பில் தடையின்றிப் பறக்கிறோம்; நாம் விரும்பியதைச் செய்யும் வல்லமை நமக்கு உண்டு. ஈரானிடம் இருந்த ஒரு நவீன ராணுவம், நமது அளவற்ற ஆயுத பலத்தால் இவ்வளவு விரைவாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க வகையிலும் அகற்றப்பட்டுள்ளது.
ஈரானின் மின் நிலையத்தை நான் தகர்க்க விரும்பினால், அதைத் தடுக்க அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். ராணுவ ரீதியாகப் பார்த்தால், அவர்கள் அழிந்துவிட்டனர். நான் யாரையும் நம்புவதில்லை. ஈரானை நம்புவதாக நீங்கள் நினைக்கிறீர்களா? நான் அவர்களை நம்புவதில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
