சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் செய்தித் தொலைக்காட்சி சார்பில் தேர்தல் விவாத நிகழ்ச்சி நேற்று (23.03.2026) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திப் பேசுகையில் அவர் முன்வைத்த விமர்சனத்தால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. அப்போது, அங்குக் கூடியிருந்த திமுகவினர் மேடையை நோக்கி நாற்காலிகளைத் தூக்கி வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அச்சமயத்தில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த நெறியாளர் ராஜேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த செய்தியாளர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளர் சேங்கை மாறன் தரப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
