டெஹ்ரான்: போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான்

டெஹ்ரான்: போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், மேற்காசிய நாடுகளுக்கு தொடர்ந்து அமெரிக்க படையினர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கி விட்டது. ஈரான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மேற்காசிய நாடுகளுக்கு சுமார் 1,000 ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைக்க உள்ளது. இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக 15 அம்சங்களுடன் அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அடங்கிய குழு, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவே ஈரான் விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கச் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னரை விட, ஜேடி வான்ஸ் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக ஈரான் நம்புகிறது.

இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை, ஈரான் தனது நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்த அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஈரான் அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் தங்கள் நாட்டுக்கு எதிராகச் செயல்படாத நாடுகளுக்கு சொந்தமான கப்பல்களை மட்டும், இந்தக் கடல்வழியை பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link