“151.93 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்”

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த  நடத்தை விதிகள் தேர்தல் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில்  கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதோடு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை எடுத்துள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். அந்த வகையில் வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடியை எளிதில் கண்டறியும் வகையில், வாக்காளர் தகவல் சீட்டில் வரிசை எண், பாகம் எண் மற்றும் பாகம் பெயர் ஆகியவை தெளிவாகத் தெரியும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் தங்கள் அலைபேசிகளைப் பாதுகாப்பாக வைக்க ஒவ்வொரு வாக்குச் சாவடியின் நுழைவாயிலிலும் ‘புறாக் கூடு’ போன்ற பெட்டி அல்லது சணல் பைகள் கொண்ட வசதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தேர்தல் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட சேவைகளை ஒருங்கிணைத்து இ.சி.ஐ.நெட் (ECINET) என்ற பிரத்யேக இணையதளம் மற்றும் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெயர் பதிவு, திருத்தங்கள் மற்றும் வாக்குப்பதிவு விவரங்களை வாக்காளர்கள் எளிதாகப் பெற முடியும். இதற்கிடையில், தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில், மார்ச் 23 வரை சுமார் 151.93 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 92.02 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link