சென்னை: ரூ.50 ஆயிரத்திற்கு மேல் மருத்துவ செலவுக்கு எடுத்து சென்றால் வாட்ஸ் அப்பில் ஆதாரம் இருந்தால் போதும், உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தேர்தலையொட்டி கண்காணிப்பில் ஈடுபட ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும்படை, வீடியோ கண்காணிப்புக்குழு, நிலையான கண்காணிப்புக்குழுக்கள், ஒவ்வொன்றிலும் போலீஸ், வருவாய் உட்பட 5 அலுவலர்கள் உள்ளனர். வாகனத்தில் உரிய ஆவணங்கள், ஆதாரங்கள் இன்றி, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் இருந்தால் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கின்றனர். இவ்வகையில் தினமும் ரூ. பல லட்சம் பணம், நகைகள் பிடிபடுகின்றன.
சென்னையில் இன்று (மார்ச் 25) நடந்த நிகழ்ச்சியில் ‘தமிழக தேர்தல் கையேடு 2026’-யை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அவர் கூறியதாவது: மருத்துவச் செலவுகளுக்காக ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்துச் செல்லலாம்; அதற்கான ஆவணங்களை வாட்ஸ்அப்பில் காண்பித்தால் போதும், அவ்வாறு காண்பித்தால் பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர்.
மக்கள் உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம். பணம் எடுத்து செல்ல ரூ.50 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ள வரம்பை இன்னும் அதிகரிக்க கோரி, கோரிக்கைகள் வந்து இருக்கிறது. இதனை தேர்தல் கமிஷன் பார்வைக்கு நாங்கள் கொண்டு சென்றுள்ளோம். மக்களுக்கு தொந்தரவு அளிக்காத வகையில் பணத்தை பறிமுதல் செய்ய பறக்கும் படைக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
