“வலதுசாரி சக்திகளை வீழ்த்த வேண்டிய பொறுப்பு விசிகவுக்கு உள்ளது”

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கூட்டணியில் உள்ள விசிக – திமுக இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த வண்ணமே இருந்து வந்தது. அதாவது இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வந்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து விசிக கேட்ட எண்ணிக்கையை விடக் குறைவான தொகுதிகளே ஒதுக்க திமுக திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால், வி.சி.க. – திமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் சமரசம் ஏற்படாமல் இருந்து வந்தது.  

இந்த சூழலில் தி.மு.க. – வி.சி.க. இடையேயான கூட்டணியில் 2ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று (24.03.2026) நடைபெற்று தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, விசிகவுக்கு 2 பொது தொகுதிகள், 6 தனித் தொகுதிகள் உட்பட மொத்தமாக 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  

அதனை தொடர்ந்து, அண்ணா அறிவாலய வளாகத்துக்கு வெளியே திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நேற்று நடந்த விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற வேண்டும் என்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரையும் வருகிற 2028இல் காலியாக உள்ள இடத்தில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நாங்கள் கலந்து பேசினோம். 23 கட்சிகள் இடம்பெற்றுள்ள ஒரு மெகா கூட்டணி 7,8 ஆண்டுகளாக தொடர்ந்து கட்டுக்கோப்பாக இயங்கி வருகிற கூட்டணி, கருத்தியல் சார்ந்து இயங்குகிற கூட்டணி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் மதவெறி சக்திகள், சாதிவெறி சக்திகள், வலதுசாரி சக்திகள் வலுபெறுவதை தடுக்க வேண்டும், நாட்டையும் மக்களையும் மதவாத வெறுப்பு அரசியலில் இருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் உறுதியேற்று செயல்படுகிற கூட்டணி. இந்த கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி அனைத்து கோணங்களிலும் நல்லது, கெட்டது போன்றவற்றை சீர்தூக்கி பார்த்து விடுதலைச் சிறுத்தைகளின் நலன் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நாம் அங்க வகிக்கும் கூட்டணியின் நலன்களும் முக்கியமானது என்பதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உடன்பெற்றிருக்கிறது.

தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தோடு நாங்கள் பயணிப்பதற்கு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பயணிப்பதற்கு, முதன்மையான காரணம் இடதுசாரி ஜனநாயக அரசியல் தமிழ் மண்ணில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். வலதுசாரி பிற்போக்கு அரசியல் காலூன்றி விடக்கூடாது, வலுபெற்று விடக்கூடாது. அது தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல, இந்திய தேசத்திற்கும் நல்லதல்ல என்கிற பார்வையில் இருந்துதான் அவ்வப்போது நாங்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறோம் உறுதிப்படுத்தி இருக்கிறோம். அதே அடிப்படையில் தான், இந்த பேச்சு வார்த்தையையும் நாங்கள் நடத்தி முடித்திருக்கிறோம். எனவே 8 தொகுதிகளில் இன்றைக்கு கையெழுத்திட்டு இருக்கிறோம். 200க்கு மேற்பட்ட இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கையோடு, தீவிர முனைப்போடு விடுதலை சிறுத்தைகள் தேர்தல் பணிகளை முன்னெடுப்போம். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். ஒருபுறம் வலதுசாரிகள், சங்பரிவார்களின் தலைமையிலான வலதுசாரிகள், இன்னொரு புறம் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் போன்ற மாமனிதர்களின் அரசியலை திரித்து பேசி திராவிட அரசியலுக்கு எதிராக களமாடுகிறோம் என்கிற பெயரில் சமூக நீதி அரசியலுக்கே வேட்டு வைக்கும் உளை வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிற திரிபுவாத சக்திகள்.

ஆகவே வலதுசாரி சக்திகளையும், திரிபுவாத சக்திகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு யாரையும் விட கூடுதலாக இருக்கிறது என்று நாங்கள் உணர்கிறோம். தற்காலிகமாக இந்த தேர்தலில் எங்களுக்கு என்ன லாபம் என்று கணக்கு போட்டு, அதன் மூலம் வலதுசாரிகள் வலு பெறுவதற்கு இடம் கொடுத்துவிட்டால் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் சாதிவெறியர்களும் மதவெறியர்களும் தான் கொட்டமடிப்பார்கள். அவர்களின் கைகள் ஓங்கும். விளிம்புநிலை மக்களுக்காக போராடக்கூடிய இடதுசாரி சக்திகள் பின்னுக்கு தள்ளப்படும் நிலை உருவாகும். என்னுடைய பார்வையில் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தந்திருக்கிற எட்டு தொகுதிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தந்திருக்கிற 10 தொகுதிகளும் சேர்த்து 18 தொகுதிகள் இடதுசாரி அரசியலை பாதுகாப்பதற்காக போராடக்கூடிய இயக்கங்களுக்கு திமுக வழங்கியிருக்கிறது என்றுதான் நான் புரிந்துக் கொள்கிறேன். விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள், சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கிற சக்திகள் இந்த கட்சிகளுக்கெல்லாம் ஒதுக்கப்பட்டிருக்கிற இந்த இடங்கள் மேலோட்டமாக பார்த்தால் எண்ணிக்கையில் குறைவு என்று தோன்றும். ஆனால் எல்லா திசைகளிலும் நாம் கூட்டி கழித்து கணக்கு போட்டு பார்த்தால் வெற்றி ஒன்றே இலக்கு வெற்றியை அடிப்படையாக கொண்டே இவற்றை நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். ஒன்று இரண்டு தொகுதிகளுக்காக முரண்பட்டு, கூட்டணிக்குள்ளே சலசலப்பை உருவாக்கி வெற்றிக்கான வாய்ப்புகளை நாம் சேதப்படுத்தி விடக்கூடாது என்கிற பொறுப்புணர்வோடுதான் இந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுத்திருக்கிறோம். இதில் எங்களுக்கு மனநிறைவு உள்ளது” என்று கூறினார். 

Source link