தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் என 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 7 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மற்ற கட்சியினர் போட்டியிடவுள்ளனர்.
இதுதவிர தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் திமுக குழு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – திமுக இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்னும் நீடித்து வந்தது. அதாவது கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இம்முறை 5 தொகுதிகளை மட்டுமே திமுக வழங்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு சம்மதம் தெரிவிக்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சென்னையில் எதாவது ஒரு தொகுதி, அதுதவிர 5 தொகுதிகளை வழங்க வேண்டும் என்று கூறியதாகக் கூறப்பட்டது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு மற்றும் செயற்குழு தேசிய குழு ஆலோசனை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில, கடந்த முறையைப் போல் 6 தொகுதிகளை திமுகவிடம் இருந்து பெற வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஒருவேளை குறைவான தொகுதிகளை திமுக கொடுத்தால் கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிடலாம் எனவும் ஒரு சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே பலகட்ட பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இன்று (23-03-26) இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திமுக அறிவாலயத்துக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீட்டு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுகவுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், கடந்த முறை வாங்கியதைவிட ஒரு தொகுதி குறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ளது
