காங்டாக்: கனமழையால் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவுகளால் வடக்கு சிக்கிமில் உள்ள சுங்தாங்கில் சாலைப் போக்குவரத்து தடைபட்டதால், சுற்றுலா பயணிகள் 200 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதைத்தொடர்ந்து, பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. முக்கிய சுற்றுலா தலமான லாச்சென் – சுங்தாங் சாலையில் உள்ள முன்ஷிதாங் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்வதால், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிக்கிமின் வடக்கே உள்ள சுங்தாங் பகுதியில் போக்குவரத்து தடைபட்டதால், சுற்றுலா பயணிகள் 200 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகள் சுங்தாங்கில் இருந்து மங்கன் பகுதிக்கு அங்குள்ள பெய்லி பாலம் வாயிலாக, தலைநகர் காங்டாகிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இப்பகுதியில் சுற்றுலா பயணியர் செல்ல, மாநில அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. கள சூழலை ஆய்வு செய்தபின், அப்பகுதிகளில் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுவர் என, சிக்கிம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
