பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி அணி என இரு அணிகளாகப் பிரிந்து, இருவேறு துருவங்களாகச் செயல்பட்டுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், கட்சியின் அதிகாரம் எந்த அணிக்கு என்பது குறித்தும், கட்சியின் சின்னம் எந்த அணிக்கு வழங்கப்படும் என்பது குறித்தும் கேள்வி எழுந்தது. இது குறித்து முடிவெடுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், மாம்பழம் சின்னம் மற்றும் கொடி அன்புமணி தரப்புக்கே சொந்தம் என்று ஒதுக்கீடு செய்து அன்புமணியின் கட்சி அலுவலக முகவரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது. இதனால், விரக்தியடைந்த ராமதாஸ், இந்த கடிதத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘கடந்த 2025 மே மாதத்துடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. அவர் தற்போது பாமகவில் தலைவராக இல்லை. இருந்த போதிலும், அவர் தலைவராக இருப்பதாகப் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து கொடுத்த விண்ணப்பத்தை ஏற்று தேர்தல் ஆணைய இந்த முடிவை எடுத்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் அந்த முடிவை ரத்து செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதே கோரிக்கை தொடர்பான விவகாரம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராமதாஸ், மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு இன்று (23-03-26) விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பது தான் நடைமுறை. குலுக்கல் முஐயில் சின்னத்தை கொடுக்கும் நடைமுறையும் பின்பற்றவில்லை’ என்று வாதிட்டார். அதனை தொடர்ந்து அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் ஆவணங்கள் அடிப்படையில் தான் எங்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், “நீங்கள் இருவரும் கொடுக்கும் அழுத்தத்தில் மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள். அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார்? சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரண்ட்லி மேட்ச் ஆடுகிறதா?” என்று கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக இரண்டு நாட்களுக்கு சிவில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றம் 3 நாட்களுக்குள் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
