புதுடில்லி: டில்லியின் அக்பர் சாலை முகவரியில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் பழைய தலைமை அலுவலகத்தை வரும் 28 ம் தேதிக்குள் காலி செய்ய மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. புதிய அலுவலகம் திறந்த பிறகும், இந்த கட்டடத்தை காங்கிரஸ் காலி செய்யாமல் இருந்து வருகிறது.
டில்லி அக்பர் சாலையில் 24 எண் பங்களாவில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. 1978 ம் ஆண்டு முதல் இங்கு இயங்கி வந்தது. 1977 ல் காங்கிரஸ் பிளவுபட்டது. அப்போது இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு அலுவலகம் தேவைப்பட்டது. 1978 ம் ஆண்டு இந்திராவை ஆதரித்த எம்பி வெங்கடசாமி, தனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை கட்சி அலுவலகம் அமைக்க கொடுத்தார். இந்திராவுக்கு பிறகு பிரதமராக இருந்த ராஜிவ், நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆட்சியிலும் இந்த அலுவலகம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருந்தது.
கடந்த 48 ம் ஆண்டுக்கு மேலாக காங்கிரஸ் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டில்லி கோட்லா சாலையில் ‘ இந்திரா பவன்’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சிக்கு புது தலைமை அலுவலகத்தை சோனியா திறந்து வைத்தார்.
எனினும் பழைய அலுவலகத்தை காங்கிரஸ் காலி செய்யவில்லை. வரலாற்று முக்கியத்துவம் கருதியும், தலைவர்களின் சென்டிமென்ட் காரணமாகவும் பழைய அலுவலகத்தையும் காலி செய்யாமல் காங்கிரஸ் காலி செய்யவில்லை.
நோட்டீஸ்
இந்நிலையில், அக்பர் சாலையில் உள்ள பழைய அலுவலகத்தை காலி செய்ய மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் ரெய்சினா சாலையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தையும் காலி செய்ய வேண்டும் என மார்ச் 28 ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மத்திய நகர்ப்புறத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
வரலாற்று முக்கியத்துவம்
காங்கிரஸ் கட்சியின் பழைய அலுவலகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கட்டடம் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சியில், வைஸ்ராய் லிங்லித்கவின் நிர்வாக கவுன்சிலில் இடம்பெற்று இருந்த ரெஜினால்ட் மேக்ஸ்வெல் இந்த கட்டடத்தில் வசித்து வந்தார்.பிறகு 1960 களில் இந்தியாவுக்கான மியான்மர் தூதராக இருந்த தாவ் கின் கி இங்கு வசித்தார். பிறகு அவரது மகளான, நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூ கி இங்கு பல ஆண்டுகள் வசித்து வந்தார்.
