சூரி தற்போது செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கும் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார். இதைத் தவிர்த்து ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் முன்னதாகவே அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ரிலீஸாவதில் தாமதம் நீடிக்கிறது.
இந்த நிலையில் சூரி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே அடுத்த படத்திற்காக பொன்ராம், மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாறன், இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிகுமார் உள்ளிட்ட இன்னும் சில இயக்குநர்கள் பெயர் அடிபட்டது. இதில் தற்போது ரவிகுமார் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது.
ரவிகுமார் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள புதுப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனம் இதற்கு முன்பாக தமிழில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’, பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்தை தயாரித்திருந்தது. சுரி படத்தை மூன்றாவது தமிழ் படமாக தயாரித்துள்ளது. இயக்குநர் ரவிகுமார், கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் பண்ண பேச்சுவார்த்தை அடிப்படையில் ஒப்பந்தமானது. ஆனால் அது தொடங்கப்படவில்லை. இப்போது சூரி வைத்து இயக்கவுள்ளார்.
சூரி நாயகனாக நடிக்கும் 7வது படம் இது. விமர்சன ரீதியாகவும் கமர்ஷியல் ரீதியாகவும் ஹிட் கொடுத்த ரவிகுமார் சூரியுடன் முதன் முறையாக கூட்டணி வைப்பது படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் ஒரு வீடு செட்டப்பில் தண்ணீர் மூழ்கி நிற்க சிலிண்டர், குக்கர் என அலங்கோலமாக கிடக்க கையில் அரிவாள்மனையுடன் சூரி பேக் போஸில் நிற்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ‘ரத்தம் ரத்தத்தை பின்பற்றுகிறது’ என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது. போஸ்டரை வைத்து பார்க்கையில் இப்படம் ஒரு ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
