கூட்டணி கட்சிகளை தலைமையின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல; திருமா போர்க்கொடி

சென்னை: தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் கூட்டணி கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடும் வகையில் அவர் எழுதியுள்ள கடிதம்:

தற்போது நடந்தேறிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மதசார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோமென்றும் அறிவித்துள்ளது. இது அக்கட்சி மற்றும் அக்கட்சித் தலைவரின் நாகரிகமான அணுகுமுறை என நாம் பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்குமோ என்கிற அச்சம் மேலிடுகிறது. மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

ஏற்புடையது அல்ல

கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்ளவது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவியாகும். தனிச் சின்னத்தில் போட்டியிடவிரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல. அது அவர்களின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப் போட்டுவிடும். கூட்டணியின் தலைமை தோழமை கட்சிகளின் அத்தகைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதேசனநாயகத்துக்கும் செலுத்தும் பெருமதிப்பாக அமையும்.

களமாட…

இந்த நெருக்கடியான சூழலில், மதவாத திரிபுவாத வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். கமல்ஹாசனும் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும்.

ஓட்டு வங்கி

மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட ‘ஓட்டு வங்கி வலிமையும்’, தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்குஎன்னும் உயரிய ‘நன்மதிப்பு வலிமையும்’கொண்ட கமல்ஹாசனை, ‘அவ்வாறு விட்டு விடமாட்டோம்’ என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும்.

முழுமையுறும்

தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ‘டார்ச்’ சின்னத்தில்’ போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் ‘வெல்வோம் ஒன்றாக’ என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

Source link