ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க நட்பு நாடுகளான பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 

மேலும் துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும் ஈரான் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. இத்தகைய சூழலில் தான் ஈரான் அரசு இந்த நீர்ச்சந்தியை மூடியுள்ளதால் சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் நாடு, இந்தத் தருணத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள், எந்தவித அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்காவிட்டால், அமெரிக்க ஐக்கிய நாடுகள் அந்நாட்டின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும். இதில் முதலாவதாகப் மிகப்பெரிய மின் நிலையம் அழிக்கப்படும். இந்த விவகாரத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி- அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப்” எனத் தெரிவித்துள்ளார்.  

மற்றொருபுறம் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் நீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்புகள் மீது பதிலடித் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானிய ராணுவமும் எச்சரித்துள்ளது. ஈரானில் புஷெர் அணுமின் நிலையம் உட்பட சுமார் 400 மின் நிலையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளப் போவதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருப்பது மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக தற்போது நிலைமை மீண்டும் பதற்றமடைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. 

Source link