‘காதல் கப்பல்’ பாடல் பற்றி பாடலாசிரியர் முத்தமிழ், “கணவனும் மனைவியும் பிரிந்திருக்கிறார்கள். மீண்டும் மனைவியுடன் கணவன் சேர்ந்துவிட வேண்டும் என நினைத்து ப்ரொபோஸ் செய்கிறார் என்பதுதான் இந்தப் பாடலுக்குக் கொடுக்கப்பட்ட சூழல்.
கணவனின் தனது காதலை கெஞ்சல் மொழியில் இப்பாடலில் வெளிப்படுத்துவார். இந்தப் பாடலின் டியூனை கேட்டதுமே, இந்தப் பாடல் ஹிட்டாகும் என்றேன். அதுபோலவே ஹிட் அடித்தது. அந்த ஹிட் ஓய்ந்த பிறகு மீண்டும் ரீல்ஸ் மூலம் பெரியளவில் இந்தப் பாடலுக்கு ரீச் கிடைத்தது. இந்தப் பாடலுக்கு வாலி சாரின் ஸ்டைலை நான் பின்பற்றினேன். பாடலின் முதல் வரிக்கும், அடுத்த வரிக்கும் தொடர்பிருக்காது. ஆனால், பாடலின் டியூனுக்கேற்ப வரிகள் அனைத்தும் ரைமிங்காக இருக்கும்.

கணவன் – மனைவிக்கு இடையே எத்தகைய சண்டை இருந்தாலும், இந்தப் பாடல் கேட்டதும் அவர்களுக்குள் இருக்கும் சண்டை தீர்ந்துப் போய்விட வேண்டும் என்பதைதான் நான் நோக்கமாகக் கொண்டு எழுதினேன். எப்போதுமே சந்தோஷ் நாராயணன் பரபரப்பான நேரத்தில்தான் என்னை எழுத வைப்பார் (சிரித்துக் கொண்டே).
அப்படி நான் பரபரப்புடன் எழுதிய பாடல்களே இங்கு அதிகம். அதனால் எந்தவொரு நபரையும் என் எண்ணத்தில் வைத்து, அந்த சூழலுக்கு என்னைப் புகுத்தி பாடல்கள் எழுதியதில்லை. ஆனால், என்னுடைய எண்ணத்திற்குள் உருவமில்லாத மனிதர்கள் இருப்பார்கள். அவர்களை நினைவில் வைத்து பாடல்களை எழுதிவிடுவேன். அப்படிதான் இந்தப் பாடலையும் நான் எழுதினேன்.
ஒரு பன்ச் வசனமாகவும் இதனை சொல்ல வேண்டுமென்றால்… “உருவமே இல்லாத பெண்ணிற்காக உருகி உருகி எழுதிய பாடல் இந்த ‘காதல் கப்பல்’.” என பலமாக சிரித்தார்.
