நா.த.கவின் முதற்கட்ட பிரச்சாரம்; தேர்தல் ஆட்டத்தை தொடங்கிய சீமான்!

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்து மாநாடு, பொதுக்கூட்டம் என அடுத்தடுத்த தேர்தல் பணியில் கடந்த ஆண்டு முதலே ஈடுபட்டு வந்தார். அதன்படி அவர் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான கட்சி வேட்பாளர்களை அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதி அக்கட்சியின் 462 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.  அந்த அறிக்கையில் 49 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக திருச்சி உள்ளிட்ட 5 நகரங்களை தலைநகரங்களாக மாற்றப்படும், 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம், சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஒழித்து தமிழ்க் குடிகளுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சீமான் தொடங்கும் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரப் பயண திட்டத்தை நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, முதல் தேர்தல் பிரச்சாரப் பயணமாக வருகின்ற மார்ச் 23ஆம் தேதி திருத்தணி முருகன் கோயில் வழிபாடு செய்து திருத்தணி தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்கிறார். அதனை தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி வேலூர், மார்ச் 25ஆம் தேதி கிருஷ்ணகிரி, மார்ச் 26அம் தேதி மேட்டூர், மார்ச் 27ஆம் தேதி சங்கராபுரம், மார்ச் 28ஆம் தேதி காஞ்சிபுரம் உள்ளிட்ட தொகுதிகளில்ம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நடத்தவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link