இந்த நேரத்தில் தமிழகத்தில் சூடு பறக்க நடந்த முந்தைய தேர்தல் களங்களை திரும்பி பார்க்க வைக்கும் முயற்சி தான் ‘தமிழ்நாடும் தேர்தலும்’
கலைஞர் மற்றும் ஜெயலலிதாவின் கடைசி தேர்தல்
11 கட்சிகள் கொண்ட அதிமுகவின் கூட்டணி பலம் ஒருபுறம், மறுபுறம் திமுக ஆட்சியில் நிலவிய மின்வெட்டு, விலைவாசி உயர்வு, திமுக மீதான 2ஜி ஊழல் குற்றச்சாட்டு என பல்வேறு காரணிகள் 2011 தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணமாகின. இதனால் 2011-ல் அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. அதனைத்தொடர்ந்து அடுத்து நடைபெற்ற 2016 தேர்தலும் மீண்டும் அதிமுகவிற்கே கை கொடுத்தது.
அதிமுக சிறிய கட்சிகளுடன் இணைந்து தனது ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே 234 தொகுதிகளில் போட்டியிட்டு 134 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனால் தொடர்ந்து இரண்டாவது முறை அதிமுக ஆட்சியமைக்கும் பெருமையை பெற்றது.
திமுக கூட்டணி 98 இடங்களை வென்று, தமிழக தேர்தல் வரலாற்றிலேயே அதிக இடங்களை கொண்ட பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இந்த தேர்தலில் திமுக 178 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வென்றது. திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 5 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வென்றது.
அதேபோல் இந்த தேர்தலில் பாமக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தனியாக போட்டியிட்டன. அதிலும் குறிப்பாக சீமானின் ‘நாம் தமிழர்’ அமைப்பு கட்சியாக மாற்றப்பட்ட பின்னர் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட முதல் தேர்தல் 2016 தேர்தல் ஆகும். முதல் தேர்தலில் நாம் தமிழர் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 1.1சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது.
