புதுடில்லி: மேற்காசியாவில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளன என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, பிப்., 28 முதல் கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்காவின் தாக்குதலால் கடுப்பான ஈரான், உலகின், 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது.
இதனால், நம் நாடு உட்பட உலகளவில், எரிவாயு, கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும்படி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
விளக்கம்
இந்நிலையில், மேற்காசிய போர் பதற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிக்க, தலைநகர் டில்லியில் இன்று மத்திய அரசு சார்பில், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கிறார். மேலும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மேற்காசிய போர் சூழல், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், கச்சா எண்ணெய் கையிருப்பு, சமையல் காஸ் கையிருப்பு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்தது.
கவலை
இதன் பிறகு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: மேற்காசிய நிலவரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்துக்கும் பதிலளித்தோம். அனைத்து கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். கட்சி சார்பில் தங்ளின் கவலையை வெளிப்படுத்தி கருத்துகளை முன்வைத்தனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடக்கும் போர் காரணமாக மேற்காசியாவில் எழுந்துள்ள சூழ்நிலை தொடர்பாக பல கேள்விகளை கேட்டனர். அதனால் இந்தியாவில் ஏற்படும் தாக்கங்கள், இந்திய மக்களுக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டனர். அதற்கு விளக்கமாகவும் தெளிவாகவும் அரசு பதிலளித்தது.
அனைத்து கட்சிகளும் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் விளக்கமளிக்கப்பட்டது. இதற்கு பிறகு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் தெளிவான பதிலளித்துள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
