வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மீதான மக்களின் நம்பிக்கை, 36 சதவீதமாக சரிந்துள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு ஜன.,20ல் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றார். இந்நிலையில் கடந்த வாரம் அதிபர் டிரம்பின் பணி செயல்பாடு, மக்களிடையே உள்ள செல்வாக்கு குறித்து ‘ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சாஸ்’ அமைப்புகள் கருத்துக் கணிப்புகள் நடத்தின. அப்போது அவரது ரேட்டிங், 40 சதவீதமாக இருந்தது.
இந்நிலையில் இன்று எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் அவர் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவரது செல்வாக்கு, 36 சதவீதமாக குறைந்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது டிரம்ப் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளதே அவரது ரேட்டிங் குறைய காரணம் என கூறப்படுகிறது.
